புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் பெருமளவான பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இன்று (31) மற்றும் நாளை (1) இரவு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்த பாதுகாப்பு கடமையில், சீருடை அணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இந்தக் கடமைகளுக்காக கொழும்பில் அதிகளவான புலனாய்வுப் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கைது செய்தல், பொது இடங்களில் திரியும் திருடர்களை கைது செய்தல், மக்களை துன்புறுத்துபவர்கள், சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களை இனங்கண்டல், போக்குவரத்து நெரிசலை குறைத்தல் ஆகியன இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கையில் உள்ளடங்கும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், மக்கள் அதிகம் கூடும் காலி முகத்திடலில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், வாகனங்களை நிறுத்த விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.