மெரினா கடற்கரைக்கு செல்ல இன்று இரவு முதல் பொதுமக்களுக்கு தடை

180 0

மெரினாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னை முழுவதும் 10 ஆயிரம் போலீசார் புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள்.

கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் ஒமைக்ரான் தொற்றும் வேகமாக பரவி வருகிறது

இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து விரிவான அறிக்கையும் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருக்கிறது.

சென்னை போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் இன்று நள்ளிரவு 12 மணியில் இருந்து நாளை காலை 5 மணிவரை அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே வெளியில் வர வேண்டும். மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை என தெரிவித்துள்ளார்.

மெரினா கடற்கரைக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்றும், நாளையும் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை போடப்பட்டு இருக்கிறது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக மெரினாவில் இரவு 8 மணியில் இருந்து பொதுமக்கள் கூடுவது வழக்கம். புத்தாண்டு அன்று நள்ளிரவு 12 மணிக்கு மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் கூடுவார்கள்.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மெரினாவில் கூட்டம் கூட இன்று இரவும், நாளை முழுவதும் முழுமையாக தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, ‘மெரினா கடற்கரை சாலை இன்று இரவு 8 மணியில் இருந்து முழுமையாக மூடப்பட்டு விடும் என தெரிவித்தனர். 8 மணிக்கு பிறகு கடற்கரை பகுதிக்கு யாரும் செல்ல முடியாத அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

நேப்பியர் பாலத்தில் தொடங்கி பட்டினப்பாக்கம் வரையில் அண்ணா சதுக்கம், மெரினா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மெரினா கடற்கரைக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் தடுப்புவேலிகள் அமைத்து வாகனங்களை போலீசார் மாற்றுப்பாதைகளில் திருப்பிவிட முடிவு செய்துள்ளனர்.

இதேபோன்று சர்வீஸ் சாலைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட உள்ளன. கலங்கரை விளக்கம் அருகில் திறந்தவெளி பகுதி வழியாக யாரும் செல்லமுடியாத வகையில் அங்கேயும் தடுப்புகள் அமைக்கப்பட இருக்கிறது.

மெரினாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னை முழுவதும் 10 ஆயிரம் போலீசார் புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள்.

புறநகர் பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தங்கும் விடுதிகள், லாட்ஜ்களிலும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகள், சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் ஆகியவற்றிலும் போலீசார் ஏற்கனவே நேரில் சென்று பல அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்கள்.

எக்காரணத்தை கொண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதனை மீறி புத்தாண்டு கொண்டாட்டங்களில் யாரேனும் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், முக்கிய நகரங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. சென்னையை போன்று கடலோர மாவட்டங்களில் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

புத்தாண்டில் தேவையில்லாமல் மதுபோதையில் சுற்றுபவர்களை கைது செய்யவும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அதற்கான ஏற்பாடுகளையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

மதுபோதையில் செல்பவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையை போன்று புறநகர் பகுதிகளிலும் ஒதுக்குபுறமாக உள்ள பங்களா வீடுகள், ஓட்டல்கள் ஆகியவற்றையும் போலீசார் கண்காணிக்க முடிவு செய்துள்ளனர். அந்த பகுதிகளில் ரோந்து சென்று விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

தடையை மீறி புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு யாராவது ஏற்பாடு செய்திருக்கிறார்களா என்பதை கண்டு பிடிக்க ரகசியமாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் ஆள் நடமாட்டம் இருக்காது எனவும், ஊரடங்கு போல முக்கிய நகரங்கள் காட்சி அளிக்கும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியில் வர எந்த தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.