ஒமைக்ரான், டெல்டா வைரஸ்களால் சுனாமி பேரலையாக கொரோனா மாறும் ஆபத்து உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இரட்டை குழல் துப்பாக்கி போல உருமாறிய கொரோனா வைரஸ்களான டெல்டாவும், ஒமைக்ரானும் தாக்குதல் நடத்தி வருகின்றன. பிரான்சில் தொடர்ந்து 2 நாட்கள் தினமும் 2 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பாவில் இதுவே அதிகபட்ச பாதிப்பு ஆகும்.
அமெரிக்காவில் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு வெளுத்துக்கட்டியது. தினசரி சராசரியாக 2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டென்மார்க், போர்ச்சுகல், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவல் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. கொரோனாவின் 4-வது அலையில் உள்ள போலந்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 794 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இங்கு நான்கில் மூவர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் ஒமைக்ரான் வைரசும், டெல்டா வைரசும் சேர்ந்து சுனாமி பேரலையாக கொரோனா மாறும் ஆபத்து உள்ளதாக எச்சரித்தார்.
இதையொட்டி மேலும் அவர் கூறியதாவது:-
தற்போது கொரோனா தொற்று பாதிப்பு சாதனை அளவாக அதிகரிக்கும் வகையில் டெல்டா வைரசும், ஒமைக்ரான் வைரசும் இரட்டை அச்சுறுத்தல்களாக உள்ளன. இதனால் ஆஸ்பத்திரி சேர்க்கைகளும், இறப்புகளும் அதிகரிக்கின்றன.
ஒமைக்ரான் வைரஸ் மிக அதிகமாக பரவுகிறது என்பது எனக்கு கவலை அளிக்கிறது. டெல்டாவும் அதே நேரத்தில் புழக்கத்தில் இருக்கிறது. இவ்விரண்டும் சுனாமி பேரலை போல கொரோனா மாறும் ஆபத்து உள்ளது.
இது மிக வேகமாக நகர்கிறது. தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதுடன், கூடுதலாக தொற்று அலைகளைத்தடுக்க பொது சுகாதார சமூக நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.
மருந்து உற்பத்தி நிறுவனங்களும், பணக்கார நாடுகளின் தலைவர்களும் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, தற்போது ஒமைக்ரான் வைரஸ்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். 70 சதவீத மக்களை தடுப்பூசி சென்றடைவதற்கு இணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.