துறைமுகத்தில் உள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நடவடிக்கை

228 0

கடந்த சில தினங்களாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையை கண்டறிவதற்கும், பொருட்களை விநியோகிக்கும் முறைகள் குறித்து ஆராய்வதற்காகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன புறக்கோட்டை மொத்த வர்த்தக நிலையங்களை கண்காணிக்கும் பணியில் இணைந்துகொண்டார்.

இதன்போது புறக்கோட்டை மொத்த வியாபாரிகளுடனான கலந்துரையாடலின் போது, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என்று அவர்கள் தெரிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

´சந்தையில் செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அரிசியின் விலையை 5 ரூபாவினால் அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் காணப்படுகின்றது. ஆனால் இன்று புறக்கோட்டை மொத்தச் சந்தையில் அரிசி கையிருப்பு இருப்பதைக் காணலாம். உலக ஸ்திரமற்ற நிலையில் எமது நாடு எதிர்நோக்கும் சூழலின் பாதகமான விளைவுகளால் மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்காமல் இருப்பதற்கு நாம் செயற்பட வேண்டிய இத் தருணத்தில் சில தரப்பினர் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்த இடத்திற்கு யார் வேண்டுமானாலும் வந்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். எவ்வாறாயினும், லங்கா சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக மக்களுக்கு தொடர்ந்து நிவாரணங்களை வழங்குவோம் என்றும் அமைச்சர் கூறினார்.

துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் அத்தியாவசியப் பொருட்களை சந்தையில் தட்டுப்பாடு ஏற்படாமல் விடுவிப்பதற்கு தேவையான டொலர்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் இன்று மேற்கொண்டுள்ளது. என்ன நடந்தாலும், மக்களின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் தொழில் பாதுகாப்பு ஆகியவற்றைப் பாதிக்கும் முடிவுகளை எடுத்து, சர்வதேசத்திற்குச் செல்ல நாங்கள் தயாராக இல்லை. மக்களுக்குத் தேவையான வசதிகளை எந்த வகையிலும் வழங்குவதற்கு நாங்கள் பாடுபடுவோம் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம் என்றும் அமைச்சர் கூறினார்.

இதற்கமைய புறக்கோட்டை மொத்த வர்தக நிலையத்தில் அமைச்சருடன் கலந்துரையாடிய வர்தகர்கள், தற்போதுள்ள கையிருப்புக்கள் மற்றும் எதிர்காலத்தில் பெறப்படவுள்ள இருப்புக்கள் தொடர்பில் அமைச்சருக்கு விளக்கமளித்தார்.

இதனைத்தொடர்ந்து பொருட்களை தட்டுப்பாடு இன்றி மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.