அரச ஊழியர்களை சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றுக

271 0

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, அரசாங்க ஊழியர்களை அவர்களது சொந்த மாவட்டத்திலுள்ள காரியாலயங்களுக்கு இடமாற்றம் செய்ய அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தென்கிழக்கு கல்விப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் உள்ளிட்டோருக்கு அவசர மகஜர்களை அனுப்பி வைத்திருப்பதாக மேற்படி பேரவையின் தவிசாளரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.முகம்மட் முக்தார், இன்று (30) தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்; மாகாணம் மற்றும் மாவட்டம் கடந்து அரச அலுவலகங்களில் கடமை புரியும் சிறிய, நடுத்தர அரசாங்க ஊழியர்கள் தமது பிரச்சினைகளை வெளியே கூற முடியாத நிலையில் உள்ளனர்.

“தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில் போக்குவரத்து கட்டண உயர்வு, உணவுப் பொருள் விலையேற்றம், தங்குமிட கட்டண உயர்வு, சுகாதார சூழ்நிலை என்பன காரணமாக பல்வேறு மன உழைச்சலுக்கும் அழுத்தலுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர்.

“அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சம்பள உயர்ச்சிகளும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக வெளியிடங்களில் இருந்து கொண்டு தமது மேலதிக செலவீனம் காரணமாக மாதாந்தம் பெறும் சம்பளத்தைக் கூட முழுமையாக குடும்ப தேவைக்கு செலவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

“எனவே, அவர்களை சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யும் பொறிமுறையொன்றை வகுக்க வேண்டும் அல்லது வெளி மாகாணங்களில், வெளி மாவட்டங்களில் கடமை புரிவோருக்கு விசேட கொடுப்பனவை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் அம்மகஜரில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டார்.