தமிழர் மரபு விளையாட்டான ஏறுதழுவுதலுக்கான தடையை நீக்கக்கோரி போராடிக்கொண்டிருக்கின்ற தமிழக மக்களின் உணர்வுகளுடன் இணைந்திருக்கிறோம் என வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
தமிழர் மரபைக்காப்பதற்காக தன்னலமற்று எழுச்சிகொண்டுள்ள தமிழ் இளையோரின் போராட்டத்தை உள்ளன்போடு வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.
மக்கள் நலனுக்காக கண்ணியத்துடன் போராடுவதில் தமிழர்களுக்கு நிகர் தமிழர்களே.
தமிழக வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் போராட்டங்கள் மூலம் நீதியை நிலைநிறுத்தியவர்கள் என்கின்ற அடையாளம் தமிழக இளையோருக்கு உண்டு.
2013இல் ஈழத்தமிழர்களுக்காக அவர்கள் கொதித்தெழுந்ததை எம் வரலாறு மறவாது.
இன்று தமிழர் மரபு விளையாட்டுக்காக, மாடுகள் விளையாடுவதற்காக, மாநிலமே போராடுவதைக்காண்கையில் மெய் சிலிர்க்கிறது.
ஒன்றுபட்ட இந்த மக்கள் எழுச்சிக்கு விரைவில் நீதி கிடைக்கவேண்டும். இந்தநேரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளுடன் இணைந்திருக்கிறோம். என்றார்.