கோத்தபாயவுக்கு அவுஸ்திரேலியாவில் நெருக்கடி!

278 0

IMG_9782ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் என அவுஸ்திரேலியாவில் உள்ள லசந்த விக்ரமதுங்கவின் மகள் வாக்குமூலமளித்துள்ளார்.

கொலை இடம்பெற சில தினங்களுக்கு முன்னர் தனது தந்தை தன்னிடம் தெரிவித்த விடயங்களை வெளிப்படுத்தியே அவுஸ்திரேலியாவில் வைத்து அவர் இவ்வாறு தமது விசாரணையாளர்களிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணை அதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா கல்கிஸ்ஸ நீதிவான் நீதிமன்றுக்கு நேற்று அறிவித்தார்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கு நேற்றைய தினம் கல்கிஸ்ஸ பிரதான நீதிவான் மொஹம்மட் மிஹால் முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போது லசந்தவின் கொலை வழக்குடன் இணைந்த சம்பவமான லசந்தவின் சாரதியை கடத்திச்சென்று மரண அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவின் சார்ஜன்ட் மேஜர் பிரேமானந்த உடலாகம மன்றில் ஆஜராகியிருந்தார்.

அவர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி யுரான் லியனகே மன்றில் ஆஜராகியிருந்த நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பான லசந்த விக்ரமதுங்க குடும்பத்தினர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ். ரணகல பிரசன்னமானார்.

இந்நிலையில் மன்றுக்கு மேலதிக விசாரணை அறிக்கையுடன் முன்னிலையான விசாரணை அதிகாரியான சிறப்பு விசாரணையாளர் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா, அவ்வறிக்கையை நீதிவான் மொஹம்மட் மிஹாலுக்கு சமர்பித்து கருத்துக்களை முன் வைத்தார்.

இதனையடுத்து சந்தேக நபர் சார்பிலோ பாதிக்கப்பட்ட தரப்பு சார்பிலோ எந்த கருத்துக்களும் முன் வைக்கப்படாத நிலையில் வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிவான் மொஹம்மட் மிஹால் அறிவித்தார்.