தூத்துக்குடியில் சுவாதி கொலையாளி ராம்குமாரிடம் இருந்து கைப்பற்றிய செல்போன் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் போலி முகவரி கொடுத்து சிம்கார்டு வாங்கியது அம்பலமானது.
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த மென்பொருள் பொறியாளரான சுவாதி சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ந்தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த ராம்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசார் பிடியில் சிக்கிய போது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் சிகிச்சைக்கு பின்பு தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக உதவி ஆணையர் தேவராஜ் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராம்குமாரிடம் இருந்து கைப்பற்றிய செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அவரது சிம்கார்டை சோதனை செய்த போது அந்த சிம்கார்டு தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்த சங்கர் என்பவர் பெயரில் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து சென்னை தனிப்படையை சேர்ந்த ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவினர் நேற்று தூத்துக்குடி சண்முகபுரத்துக்கு வந்தனர். அவர்கள் அப்பகுதியில் விசாரணை நடத்தியதில் அந்த முகவரி போலியானது என தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மீண்டும் சென்னை சென்றனர். இந்த திடீர் விசாரணையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.