மோடிக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் கண்டனம்

256 0

201701162211387526_Pak-Senate-condemns-Modis-mothership-of-terrorism-remarks_SECVPFதீவிரவாதத்தின் தாயகம் என பாகிஸ்தானை, பிரதமர் மோடி குறிப்பிட்டதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “தீவிரவாதத்தின் தாயகம் மற்றும் உலகில் உள்ள எல்லா தீவிரவாத இயக்கங்களுக்கும் தொடர்புடைய நாடு” என பாகிஸ்தானை மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசினார்.
மோடியின் இந்த பேச்சுக்கு பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்ற செனட் சபை இன்று கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்தத் தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய அந்நாட்டு எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர் சேஹர் கம்ரான் “மோடியின் இந்த கருத்து அடிப்படை ஆதாரமற்றது மற்றும் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பார்வையில் இருந்து திசைதிருப்பும் முயற்சியாகும். பாலஸ்தீன் விவகாரத்தில் இஸ்ரேலின் நிலைப்பாடு எதுவோ, அதுவே காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு” என கூறினார்.
கண்டன தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய செனட் உறுப்பினர்கள், இந்தியா போர்நிறுத்த உடன்படிக்கையை மீறி தாக்குதல் நடத்துவதாக கூறி கண்டனம் தெரிவித்தனர். விவாதத்திற்குப் பின்னர் இந்த தீர்மானம் எதிர்ப்பின்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தான் காஷ்மீர் மக்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்கும், இந்தியா தனது அண்டை நாடுகளில் தொடர்ந்து பிரச்சனைகளை கிளப்பி வருகிறது என பாதுகாப்பு மந்திரி பேசியது குறிப்பிடத்தக்கது.