ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூரில் திரண்ட இளைஞர்கள் மீது போலீஸ் தடியடி

328 0

jalliபோலீசாரின் கட்டுக்காவலையும் மீறி அலங்காநல்லூரில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. தடையை மீறி பேரணி, ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். வாடிவாசலில் திரண்ட முகநூல் நண்பர்கள் நள்ளிரவு வரை தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது. உச்சநீதிமன்ற தடையால் தொடர்ந்து 3வது ஆண்டாக இம்முறையும் ஜல்லிக்கட்டு நடக்குமா என கேள்வி எழுந்தது. இதனால் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பகுதி மக்கள் கடும் கொந்தளிப்பிற்கு ஆளாகியுள்ளனர். கடந்த 14ம் தேதி அவனியாபுரம், நேற்று முன்தினம் பாலமேடு, அலங்காநல்லூர்அருகே காளைகள் களமிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கும் நாள் என்பதால், அலங்காநல்லூர் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் போலீசார் கொண்டு வந்தனர். வழித்தடங்கள் அனைத்திலும் சோதனைச்சாவடிகள் அமைத்து, சாலைகள் சீல் வைக்கப்பட்டன. அலங்காநல்லூர் பகுதிக்கான பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. போலீசாரின் கெடுபிடிகளையும் மீறி, தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நேற்று அலங்காநல்லூரில் குவிந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வஜ்ரா உள்ளிட்ட போலீஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.  இந்நிலையில் பீட்டா அமைப்பையும், ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளையும் கண்டித்து அலங்காநல்லூர் பகுதியில் தொடர்ந்து 3வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டு,  வீடுகள், கடைகளில் கருப்புக்கொடிகள் ஏற்றப்பட்டன.
பதற்றமான சூழலில் நேற்று காலை முனியாண்டி, விநாயகர், அரியமலை சாமி, முத்தாலம்மன் மற்றும் காளியம்மன் என 5 கோயில்களின் காளைகளை ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் அலங்காநல்லூரில் உள்ள வாடிவாசல் பகுதிக்கு நேற்று காலை கொண்டு வந்தனர். அங்கு காளைகளுக்கு பூஜை நடத்தப்பட்டது. அப்போது ஒரு சந்துப்பகுதிக்குள் இருந்து திடீரென இரு கன்றுக்குட்டிகளை முதலிலும், பிறகு ஒரு ஜல்லிக்கட்டு காளையையும் இளைஞர்கள் மைதானத்தில் அவிழ்த்து விட்டனர். கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் உற்சாகமான கரகோஷத்தில், அந்தக்காளை சீறிப்பாய்ந்தது. அடக்கப் பாய்ந்த 2 இளைஞர்களை, தூக்கி வீசியதால் உற்சாகம் பீறிட்டது. 10 நிமிடங்களுக்கும் மேலாக மைதானத்தில் வலம் வந்த அந்த காளை, பிறகு வெற்றியுடன் மைதானத்தில் இருந்து வெளியேறியது. அந்த காளையை பிடிக்க முடியாமலும் மாடுபிடி வீரர்களை தடுக்க முடியாமலும் போலீசார் தவித்தனர்.

இதனை தொடர்ந்து வாடிவாசல் அருகே கிராம முக்கியஸ்தர்களுடன், போலீஸ் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது திடீரென ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒரே நேரத்தில் பேரணியாக திரண்டு வந்து வாடிவாசல் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். ஏராளமான பெண்களும், பொதுமக்களும் சாலையில் அமர்ந்து, திடீர் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில், அலங்காநல்லூர் – வாடிப்பட்டி ரோட்டிலிருந்து  2 ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஆயிரக்கணக்கானோர்  திரண்டு வந்தனர்.  போலீஸ் தடுப்புகளை உடைத்துத் தள்ளியபடி, வாடிவாசலை நோக்கி முன்னேறினர். இதையடுத்து மதுரை மாவட்ட எஸ்பி விஜயேந்திர பிதாரி தலைமையில் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி தடியடி நடத்தினர். இதனால் நாலாபுறமும் அவர்கள் சிதறி ஓடினர். தடியடியில் மக்களுடன், 2 காளைகளும் சிக்கி கூட்டத்திற்குள் புகுந்து ஓடியது. இப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர்களும் அடித்து நொறுக்கப்பட்டன. போலீசாரின் தடியடியில் சேலத்தைச் சேர்ந்த மணிகண்டன்(22) மற்றும் ஒரு சிறுமி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஓடியவர்களை விரட்டி, விரட்டி போலீசார் தடியடி நடத்தினர். இப்படி 5க்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்து தடியடி நடந்தது. இதனால் அலங்காநல்லூர் பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது.

முகநூல் நண்பர்கள்: சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த முகநூல் நண்பர்கள் குழுவினர் 300க்கும் மேற்பட்டோர், அலங்காநல்லூர் வாடிவாசல் மந்தையம்மன் திடலுக்கு நேற்று காலை 9.30 மணிக்கு வந்தனர். இவர்கள் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘வாடிவாசல் வழியாக காளைகளை அவிழ்த்து விட்டால் மட்டுமே இந்த போராட்டத்தைக் கைவிடுவோம்’ என்று கோஷமிட்டனர். பின்னர் ‘உண்ணாவிரதமாக இதை தொடர்வோம்’ என்று அறிவித்தபடி அங்கேயே அமர்ந்தனர். இதனால் மேலும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டனர். இவர்களிடம் மதுரை ஆர்டிஓ செந்தில்குமாரி, வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்ரன், இன்ஸ்பெக்டர் அன்னராஜ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால், அவர்கள் வெளியேற மறுத்து விட்டனர். இவர்களுக்கு ஆதரவாக கிராமப்பெண்களும், குழந்தைகளுடன் போராட்ட இடத்தில் அமர்ந்தனர். போராட்டம் நள்ளிரவு வரை நீடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  மதுரை கலெக்டர் வீரராகவராவ், எஸ்பி விஜயேந்திர பிதாரி பேச்சுவார்த்தை நடத்தியும் யாரும் கலைந்து செல்லவில்லை. இதனை தொடர்ந்து ஏற்கனவே பாதுகாப்பில் இருந்த போலீசாரை மாற்றி, வேறு மாவட்டங்களில் உள்ள போலீசார் வரவழைக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளனர்.

உணவு கொண்டு சென்ற இருவர் கைது: அலங்காநல்லூரில் வாடிவாசல் முன்பு உண்ணாவிரதம் இருந்த சமூக வலைத்தள நண்பர்கள் அமைப்பினருக்கு, அலங்காநல்லூரைச் சேர்ந்த ஜெகதீசன், சரவணன் ஆகியோர் உணவு கொண்டு சென்றனர். ஆனால், இருவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அடுத்தும் சிலர் உணவு கொண்டு சென்றபோது போலீசார் அவர்களை விரட்டியடித்தனர். உணவு, குடிநீரின்றி போராட்டம் நடந்து வருகிறது.
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சமூக வலைத்தள நண்பர்கள் போராட்டத்தைத் தொடர்கின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கச் செல்லும் உள்ளூர் மக்களையும் போலீசார் விரட்டி அடிப்பதால் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே பெரியகலையம்புதூரில் ஐகோர்ட் காளியம்மன் கோயில் பகுதியில், தற்காலிக வாடிவாசல் அமைத்து 15க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறி வந்த காளைகளை இளைஞர்கள் அடக்கினர். சாணார்பட்டி அருகே தவசிமடையை சேர்ந்த 10 காளைகள் நேற்று காலை 6 மணிக்கு சிறுமலை அடிவாரம் செங்குளம் பகுதியிலும், வீரசின்னம்பட்டியில் நேற்று காலை 11 மணியளவிலும் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. திண்டுக்கல், நத்தம் ரோட்டில் உள்ள நல்லாம்பட்டியில் 2ம் நாளாக நேற்று ஊருக்குள் சிலர் காளைகளை அவிழ்த்து விட்டு ஜல்லிக்கட்டை நடத்தினர்.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கட்டிக்குளத்தில் நேற்று காலை 10 காளைகளுடன் ஜல்லிக்கட்டு நடந்தது. கீழமேல்குடியில் 4 காளைகள் விடப்பட்டன. கோபி: இதேபோல கோபி அருகே உள்ள கூடக்கரையில் தடையை மீறி கிராம மக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தினர்.
மாணிக்கம்பாளையம்: ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியில் பொங்கல் பண்டிகையொட்டி தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகளை அப்பகுதி இளைஞர்கள் நடத்தினர்.பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தது. 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  1 மணி நேரம் கழித்து போலீசார் தடுத்து நிறுத்தினர்.வேலூர்: வாணியம்பாடி, பேரணாம்பட்டு அருகே தமிழக – ஆந்திர எல்லையோர கிராமங்களில் தடைமீறி மாடு விடும் விழா நடந்தது. இதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

மற்ற மாநிலங்களில் போலீஸ் பாதுகாப்பு இங்கு தடியடியா?; பொதுமக்கள் குமுறல்
அலங்காநல்லூரை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ‘‘அமைதியான முறையில் போராடியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். மற்ற மாநிலங்களில் போலீசாரின் பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு நடந்துள்ளது. தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள் ஜல்லிக்கட்டு நடத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எம்எல்ஏ, எம்பிக்கள், அமைச்சர்களை காணவில்லை. ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத அமைச்சர்கள், அதிகாரிகளை கண்டித்து எங்கள் போராட்டம் தொடரும்’’ என்றனர்.

சட்டமீறல் நடக்கவில்லைகலெக்டர் பேட்டி

மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், எஸ்பி, விஜயேந்திர பிதாரி ஆகியோர் கூறும்போது, ‘‘மதுரை மாவட்டத்தின் முக்கிய பண்டிகையான தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல் ஆகியவற்றை மக்கள், எந்தவிதமான சட்டம் ஒழுங்கு மீறல் இல்லாமல் அவரவர் வழிகாட்டு முறைகளுக்கு ஏற்ப சிறப்பாக கொண்டாடி முடித்துள்ளனர். அதேபோல், தங்கள் வீடுகளில் வளர்க்கும் பசு, காளை மாடுகளுக்கு வழிபாட்டு முறைகளையும் சட்ட விதி மீறல்கள் இல்லாமல் கடைபிடித்துள்ளனர். தடை மீறி ஜல்லிக்கட்டோ, வேறு சட்ட மீறல்களோ நடக்கவில்லை’’ என்றனர்.

மாணவர்கள் டூவீலர் பேரணி
மதுரை தியாகராஜர் கல்லூரி, சட்டக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளின் மாணவர்கள் டூவீலர்களில் 500க்கும் மேற்பட்டோர் மதுரை செல்லூரிலிருந்து அலங்காநல்லூர் சென்றனர். இவர்களை மிளகரணை செக்போஸ்ட்டில் போலீசார் தடுத்து நிறுத்தி, அரை மணி நேரத்திற்கு பிறகு அனுமதித்தனர்.   முடிவாக அலங்காநல்லூரிலும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அமைதி ஊர்வலம்
அலங்காநல்லூரில் நேற்று நடந்த அமைதி ஊர்வலத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், திமுக எம்எல்ஏ மூர்த்தி, இயக்குநர் அமீர், இசையமைப்பாளர் ‘ஹிப்ஹாப்’ தமிழா, நடிகர் ஆரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு தலைவர் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வாடிவாசலில் ஆரம்பித்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று துவக்க இடத்திற்கே வந்தது. முன்னதாக வாடிவாசல் அருகே அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இயக்குநர் அமீர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பீட்டா அமைப்பு ஒரு ஏஜென்ட். அதைப்பற்றி பேசத்தேவையில்லை. பெல்ஜியத்தில் மாடுகளை வெட்டுகின்றனர். ஆனால், தமிழகத்தில் காளைகளை பிள்ளைகளாக வளர்க்கின்றனர். நீதித்துறைக்கு சரியான புரிதலின்றியே, தடை விலகாமல் இருக்கிறது. கண்டிப்பாக வரும் காலம் நல்லதீர்ப்பைத் தரும்’’ என்றார்.

தடைக்கு முன் 41 இடம்; தடைமீறியது 400 இடம்

ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டபோது தமிழகத்தில் 600 இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக உச்சநீதிமன்றத்தில் பட்டியல் அளிக்கப்பட்டது. 2008ல் தமிழக அரசு ஜல்லிக்கட்டு அங்கீகார சட்டம் இயற்றி, உச்சநீதிமன்ற நெறிமுறைகளுடன் மாவட்ட கலெக்டர் அனுமதி பெற்று 180 இடங்களில் நடத்த அனுமதி அளித்தது. அதில் டெபாசிட் உள்ளிட்ட கடும் நிபந்தனைகளால் 41 இடங்களில் மட்டுமே நடந்து வந்தது. தடைக்கு பிறகு சுமார் 400 இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கூறும்போது, “காட்டாற்று வெள்ளமாக பொங்கி எழுந்த போராட்டத்தால் தடை மீறி தமிழகத்தில் 3 நாளில், 400க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு காளைகள் அவிழ்த்து விடப்பட்டு சீறி பாய்ந்துள்ளன. இதே நிலை நீடித்தால், மீண்டும் 600 இடங்களில் ஜல்லிக்கட்டு வாடிவாசலை திறக்கும் நிலை ஏற்படும்” என்றனர்.

13 அமைப்பினர் 20 கிமீ நடைபயணம்

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி 13 அமைப்பினர், இளைஞர்கள், மாடுபிடி வீரர்கள் மதுரை பாத்திமா கல்லூரி முன்பு நேற்று திரண்டனர். இவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியபடி, அலங்காநல்லூருக்கு நடைபயணம் கிளம்பினர். பதாகைகளையும் சுமந்தபடி பங்கேற்றனர். மிளகரணை பகுதி செக்போஸ்ட்டில் டிஎஸ்பி, ராமசாமி தலைமையிலான போலீசார் இவர்களை தடுத்து நிறுத்தினர். எஸ்பி உத்தரவுக்குப்பிறகு இவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் பாசிங்காபுரம், குமாரம் வழியாக 20 கிமீ ஊர்வலமாகச் சென்று அலங்காநல்லூரை அடைந்தனர். வாடிவாசலை நோக்கிச் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்குள்ள மெயின்ரோட்டில் அமர்ந்து ஒரு மணி நேரம் மறியல் செய்தபடி, கோஷங்கள் எழுப்பினர். தடையை மீறி வாடிவாசலுக்குள் செல்ல முயன்றதால் வாக்குவாதம் முற்றியது. உள்ளே நுழைய முயன்றவர்களில் 45 பேரை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வேனில் ஏற்றி போலீசார் கைது செய்தனர்.