மட்டக்களப்பு, வட்டவான் பிரதேச மக்களின் பிரதான போக்குவரத்துப்பாதை வெளிநாட்டை சேர்ந்த ஒருவரினால் அபகரிக்கப்படுவதை கண்டித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டவான் பிரதேச மக்களின் பிரதான போக்குவரத்துப்பாதை வெளிநாட்டை சேர்ந்த ஒருவரினால் அபகரிக்கப்படுவதை கண்டித்தும் தமது பிரதேச காணியை வெளிநாட்டவருக்கு வழங்கியுள்ளதை கண்டித்தும் குறித்த ஆர்பாட்டம் நடைபெற்றது.
நேற்றுக் காலை வாகரை வட்டவானில் உள்ள குறித்த வெளிநாட்டவரின் விடுதிக்கு முன்பாக ஒன்றுதிரண்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பகுதியில் பிரதான வீதியை ஊடறுத்துச்செல்லும் காணிக்கு அருகில் உள்ள வாகரை பிரதேசசபைக்கான வீதியை குறித்த வெளிநாட்டவரை சேர்ந்தவர் சேதப்படுத்தி அதனை வேலியிடும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதியை வட்டவான், இறால்ஓடை, நாசிவன்தீவு, காயன்கேணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குறித்த வீதியை பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த வெளிநாட்டவரினால் சட்ட விரோதமான முறையில் வட்டவான் பகுதியில் பல்வேறு நடவடிக்ககைள் முன்னெடுக்கப்பட்டுவரும்போதும் அது தொடர்பில் யாரும் கவனத்தில் கொள்ளவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்போது ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமைகளை தெளிவுபடுத்தியதுடன் அது தொடர்பில் நடவடிக்கையெடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.