தனது மகன் நாமல் ராஜபக்ஷவுக்குச் சார்பாக நீதிமன்றத்திலோ, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ தான் முன்னிலையாகப்போவதில்லையென முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை நமல் ராஜபக்ஷ நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டதையடுத்தே அவரது தந்தையான முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், நாமல் ராஜபக்ஷ என்னுடைய மகனாக இருந்தபோதிலும், அவர் ஒரு அரசியல்வாதி, பல அரசியல்வாதிகள் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர்.
அவர்களுக்காக, நான் நீதிமன்றத்துக்கோ, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கோ செல்லமாட்டேன்.
அரசியல்வாதியான நாமல் ராஜபக்ஷ சார்பாக நீதி மன்றத்துக்கோ, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கோ செல்லக்கூடாது என்பதே எனது நிலைப்பாடாகும்.
நேற்று(திங்கட்கிழமை) நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தனது மகனைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், நான் அரசாங்கத்தைப் பார்த்துக் கேட்கின்றேன், ‘இப்போது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றதா?’ இது ஒரு அரசியல் பழிவாங்கல் நிகழ்வு. இதில் வேறொண்றும் இல்லை. இது ஒரு பிரச்சனையான விடயமே அல்ல. இது வழமையான விடயம் ஒன்றே எனவும் தெரிவித்துள்ளார்.