திருச்சி கே.கே.நகர் வாழ் ஈழத் தமிழ் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து முதியோர் இல்லமொன்றில் தை பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடியுள்ளார்கள்.திருச்சி விமான நிலையப் பகுதியில் அமைந்துள்ள அன்னை ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டுவரும் பாட்டிகளுடன் பொங்கல் விழாவை கொண்டாடியுள்ளார்கள் ஈழத் தமிழ் இளைஞர்கள்.காலை 9 மணியளவில் முதியோர் இல்லத்தில் ஒன்றுகூடிய ஈழத் தமிழ் இளைஞர்களுடன் அங்கிருந்த பாட்டிமாரும் இணைந்து பொங்கல் ஏற்பாடுகளை செய்தார்கள்.
பொங்கல் வைக்கும் அடுப்பை ஈழத் தமிழ் இளைஞர்கள் தயார் செய்த போது அங்கிருந்த பாட்டியொருவர் அடுப்பை சுற்றி கோலமிட்டு அழகுபடுத்தியிருந்தார். மாவிலை மஞ்சல் செடி கட்டி அலங்கரித்த பொங்கல் பானையை முதியோர் இல்லத்து பாட்டிமாருடன் ஈழத் தமிழ் இளைஞர்களும் சேர்ந்து அடுப்பில் வைத்தார்கள். மதியம் 12 மணியளவில் நிறைகுடம் வைத்து படையலிட்டு கதிரவனுக்கு வழிபாடு செய்யப்பட்டது.அதன் பின்னர் வழக்கமாக அவர்கள் உணவு உண்ணும் பகுதிக்கு பொங்கலை எடுத்துச் சென்று அனைவருக்கும் பரிமாறியதோடு அவர்களுடன் சேர்ந்து தாமும் உண்டு சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
குடும்பம் எனும் பெரு விருட்சத்தை தாங்கி தழைத்தோங்க வைத்தவர்களை சுமையாகக் கருதி முதியோர் இல்லங்களில் அநாதரவாக விடப்படும் இன்றைய கால சூழ்நிலையில் அவ்வாறானவர்களை நாடிச்சென்று அவர்களுடன் பொங்கல் விழாவை கொண்டாடியுள்ள திருச்சி கே.கே.நகர் வாழ் ஈழத் தமிழ் இளைஞர்கள் அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்கின்றனர்.
திருச்சியில் இருந்து இரா.மயூதரன்.