தமிழக அரசை கலைக்க வேண்டும் என கூறுவதற்கு பீட்டா அமைப்புக்கு தகுதியில்லை என்று தமிழிசை சவுந்திரராஜன் காட்டமாக கூறினார்.
சுப்ரீம் கோர்ட்டு தடை காரணமாக தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை இந்த ஆண்டில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தால் தமிழக அரசை கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதி உள்ளது.
இந்த நிலையில், கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இந்தியாவில் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும், தமிழக அரசை கலைக்க வேண்டும் என கூறுவதற்கு பீட்டா அமைப்புக்கு தகுதியில்லை என்று காட்டமாக கூறினார்.