ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டு எடுக்க இளைஞர் சமுதாயத்துக்கு தி.மு.க. துணை நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழர்களின் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ள அ.தி.மு.க. அரசுக்கும், மத்திய அரசுக்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
2014-ம் ஆண்டு மே மாதமே ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தும், மூன்று வருடங்களாக கடிதம் எழுதுவது மட்டுமே “நிர்வாகம்” என்ற ரீதியில் அ.தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்பதோடு, ஆங்காங்கே தங்களின் பாரம்பரிய மற்றும் பண்பாட்டு உரிமைகளுக்காகப் போராடிய மாணவர்களையும், இளைஞர்களையும் கைது செய்தும், தடியடி நடத்தியும் அ.தி.மு.க. அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்திருக்கிறது.
எப்பாடு பட்டாவது தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொண்டால் போதும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்படும் அ.தி.மு.க. அரசு, மத்திய பா.ஜ.க. அரசின் எடுபிடியாக மட்டுமே மனமுவந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, மாநில உரிமைகளுக்காகவோ, தமிழர்களின் உரிமைக்காகவோ ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுப்பதற்கு அ.தி.மு.க. அரசு தயாராக இல்லை என்பது ஜல்லிக்கட்டு பிரச்சினையில் வெளிப்படையாகவே அரங்கத்திற்கு வந்து விட்டது.
ஊழலில் திளைக்கும் அ.தி.மு.க. அரசு, மத்திய அரசிடம் வலுவாக கோரிக்கை வைக்கும் பலத்தை இழந்து, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட தமிழக நலன்களை எல்லாம் கூச்சமின்றி தாரை வார்த்து விட்டு தடுமாறி நிற்கிறது. காவிரி உரிமை, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், வறட்சி நிவாரண நிதி ஒதுக்குதல், வார்தா புயல் நிவாரண நிதி வழங்குதல், ஜல்லிக்கட்டு என அனைத்திலும் மத்திய அரசு, தமிழக நலன் சார்ந்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது.
அ.தி.மு.க. அரசின் அலட்சியத்தினால், இந்த வருடம் பொங்கல் திருநாளில் ஜாம், ஜாம் என்று நடக்க வேண்டிய ஜல்லிக்கட்டு தடைபட்டு நிற்பது மட்டுமின்றி, “போலீஸ் கைது”, “போலீஸ் தடியடி”, என்று அரசின் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. வீடுகளில் தோரணம் கட்டி பொங்கல் வைப்பதைக் கூட விட்டு விட்டு அணி வகுத்து நின்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றால், சர்க்கரை பொங்கலுடன் கொண்டாட வேண்டிய ஜல்லிக்கட்டு விளையாட்டு எந்த அளவிற்கு தமிழர்களின் ஊனோடும், உயிரோடும் இரண்டறக் கலந்திருக்கிறது என்பதை பறைசாற்றுகிறது.
கையாலாகாத அ.தி.மு.க. அரசு பதவியில் நீடிப்பதற்காகவும், அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு எதிரான வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ. நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காகவும் மட்டுமே இன்றைக்கு ஜல்லிக்கட்டு தாரை வார்க்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் கலாசார உரிமைகளை தரணியில் நிலைநாட்ட வீறு கொண்டு எழுந்து நிற்கும் உணர்ச்சிமயமான இளைஞர்களைப் பார்க்கும்போது, அந்த உணர்ச்சியை துளியும் மதிக்காத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறதே என்ற தாங்கமுடியாத வேதனைதான் ஏற்படுகிறது.
தமிழக நலன்களைப் புறக்கணிக்கும் அ.தி.மு.க. அரசின் இதுபோன்ற செயல்பாடுகளை தமிழக மக்கள் வெகு காலம் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். உலகத்தையே ஈர்க்கும் “அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு” களையிழந்து நிற்பதைப் பார்த்து ஒவ்வொரு தமிழனும் கண்ணீர் சிந்துகிறான் என்றால், அப்படி தமிழன் இன்று சிந்தும் கண்ணீர் வீண் போகாது என்பதை மட்டும் மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.
தமிழக மண்ணின் மாண்பைப் போற்றும் வீரமிக்க இந்த ஜல்லிக்கட்டு நடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதையும், இந்த ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டு எடுக்க, எரிமலையாக குமுறிக் கொண்டிருக்கும் இளைஞர் சமுதாயத்திற்கு தி.மு.க. என்றைக்கும் துணை நிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.