முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக் பிறந்தநாளையொட்டி விவசாயிகள் 176 பானைகளில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
தென்தமிழகத்தின் பாசன மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக்கின் 176-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிபட்டியில் கிராம மக்கள் 176 பானைகளில் பொங்கல் வைத்தனர். சுருளிபட்டி முல்லைப்பெரியாற்றில் கட்டப்பட்டுள்ள பென்னிகுக் பாலத்தில் இந்த விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக ஊர்வலமாக வந்த பொதுமக்கள் பென்னிகுக் படத்துக்கு மாலை அணிவித்து சூடம் காட்டி வணங்கினர். தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
கூடலூர் லோயர்கேம்ப் மணிமண்டபத்தில் உள்ள பென்னிகுக் சிலைக்கு பெரியாறு அணை மீட்பு குழுவினர், விவசாயிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் மீட்புகுழு தலைவர் ரஞ்சித்குமார், 5 மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் அப்பாஸ், 18-ம் கால்வாய் விவசாய சங்க தலைவர் ராமராஜ், துணைத்தலைவர் திருப்பதிவாசன், தேனி மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் முத்துராலிங்கம், மாவட்ட தி.முக. செயலாளர் ஜெயக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போடி, தேவாரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கிராம மக்கள் பென்னிகுக் பிறந்தநாளையொட்டி பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.