யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குற்பட்ட நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கான வீடமைப்பு திட்டம் ஒன்றை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர்.
இந்த முகாமைச் சேர்ந்த 112 குடும்பங்களுக்கு மாவிட்டபுரம் – கீரிமலை பகுதியில் சீமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான அரச காணியில் தலா 2 பரப்பு காணி ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது.
இந்த காணியில் முதற்கட்டமாக நூறு வீடுகளை அமைக்கும் பணிகள் இன்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.
இதேவேளை இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, எதிர்வரும் 45 நாட்களுக்குள் இந்த வேலைத்திட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.
இடைத்தங்கல் முகாமில் உள்ள 60 சதவீதமான மக்களுக்கு குடியேற்றக் காணிகள் இல்லை. இதன்அடிப்படையிலேயே தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்காக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
அனைத்து மக்களுக்கு காணிகளை வழங்கும் வகையில் இராணுவத்தினால் விடுவிக்கப்படக்கூடிய காணிகளை விடுவித்து, அங்கும் வீடமைப்பு திட்டத்தை அமுலாக்குவது குறித்து ஆராய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.