அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என சுதந்திர கட்சியின் செயற்குழு தீர்மானித்தால் அமைச்சு பதவிகளை துறந்து வெளியேற தயார். பதவிகளை காட்டிலும் கட்சியே எமக்கு முக்கியமானது.
அரசியல் அனுபவம் இல்லாத பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் கூட்டணியின் பங்காளி கட்சியினரை அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமாறு தொடர்ந்து குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். அவர்களின் கருத்து குறித்து ஜனாதிபதி அதிக கவனம் செலுத்த வேண்டும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தை பலவீனப்படுத்த அரசாங்கத்திற்குள் சதி திட்டம் முன்னெடுக்கப்படுகிறது என சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திர கட்சி அலுவலகத்தில் நேற்று இடம் பெற்றது. செயற்குழு கூட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சுதந்திர கட்சி மறுசீரமைப்பு,மாகாண சபை தேர்தல்,அரசியல் பிரச்சினைகள்,சமூக பிரச்சினைகள் மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டம் உள்ளிட்ட காரணிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அனைத்து தொழிற்சங்கங்களையும் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் மறுசீரமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதான கூட்டத்தை விரைவில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது குறித்து கவனம் செலுத்தப்படவில்லை. அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பில் கட்சி ஏகமனதாக தீர்மானம் எடுத்தால் அமைச்சு பதவிகளை துறக்க தயார்.கட்சியின் மத்திய செயற்குழு எடுக்கும் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட போவதில்லை.
புதவிகளை காட்டிலும் கட்சி எமக்கு முக்கியமானதாக உள்ளது.நாட்டை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் தீர்மானங்களை முன்னெடுக்க மாட்டோம்.எதிர்க்கட்சி தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பயனடையும் வகையில் அரசியல் தீர்மானங்களை ஒருபோதும் முன்னெடுக்க போவதில்லை.
எக்காரணிகளுக்காகவும் பொதுஜன பெரமுனவிற்கும்,ஐக்கிய தேசிய கட்சிக்கும் செல்ல போவதில்லை.சுதந்திர கட்சிக்குள் இரு வேறுப்பட்ட தீர்மானம் கிடையாது.கட்சியின் செயற்குழு எடுக்கம் தீர்மானம் சிறந்ததாக அமையும்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் அரசியல் அனுபவம் இல்லாத உறுப்பினர்கள் தான் பங்காளி கட்சியினரை அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமாறு தொடர்ந்து குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.அவர்களின் செயற்பாடு குறித்து ஜனாதிபதி அதிக கவனம் செலுத்த வேண்டும்.ஜனாதிபதியை பலவீனப்படுத்தும் சதி திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால் பலர் தொடர்ந்து அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவார்கள்.அவ்வாறு இடம் பெற்றால் ஜனாதிபதி பலவீனமடைவார் அதனையே பொதுஜன பெரமுனவில் உள்ள பலர் எதிர்பார்க்கிறார்கள் என்றார்.