2014-ம் ஆண்டில் இருந்து வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு அதை புதுப்பிக்க 3 மாத கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் செயலாளர் கிர்லோஷ்குமார் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழக சட்டசபையில் கடந்த செப்டம்பர் 4-ந் தேதியன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, தங்கள் பதிவை 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறிய 48 லட்சம் பதிவுதாரர்கள் பயனடையும் வகையில் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும்.
2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் தங்களது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு ஏற்கனவே 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. இக்கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ஏற்று புதுப்பித்தல் சலுகை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து வழங்கப்படும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து அரசுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் கடிதம் எழுதியுள்ளார். அவர் அளித்த கருத்துருவை அரசு கவனமுடன் ஆய்வு செய்தது.
தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களில் 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை மற்றும்,
2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பிற்கான பதிவை புதுப்பிக்க கடந்த மே மாத அரசாணையில் வழங்கப்பட்ட கால அவகாசம் முடிந்துள்ள நிலையில், மேலும் 3 மாதங்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படுகிறது.
இந்தச் சலுகையை பெற விரும்பும் வேலை நாடுநர்கள், அரசாணை வெளியிடப்படும் நாளில் இருந்து (2-ந் தேதியில் இருந்து) 3 மாதங்களுக்குள் விடுபட்ட பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த சலுகை ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்.
3 மாதங்களுக்கு பின்பு பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். 1.1.2014 தேதிக்கு முன்பு புதுப்பிக்கத் தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது.
இந்த அரசாணை, அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களின் தகவல் பலகையில் மக்களுக்காக காட்சிப்படுத்தப்பட வேண்டும்.