சிறந்த நிர்வாக முகாமைத்துவம் இல்லாத காரணத்தினால் சமூகத்தின் மத்தியில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது. எனவே ஆளும் கூட்டணியில் உள்ள 11 கட்சிகளும் இனி வெளியேறலாம் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்தார்.
சுதந்திர கட்சியின் தலைமை காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணி தலைமையிலான அரசாங்கத்தில் சுதந்திர கட்சி பிரதான பங்காளி கட்சியாக உள்ளது. கூட்டணியினால் ஒன்றிணைந்ததன் காரணமாக அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளுக்கும், தீர்மானங்களுக்கும் துணை செல்ல வேண்டிய தேவை எமக்கு கிடையாது.
பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நாட்டு மக்கள் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள். மக்களின் எதிர்பார்ப்பு ஏதும் நிறைவேற்றப்படவில்லை. அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களினால் மக்கள் பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள்.
தொழிற்துறையினரது ஆலோசனைகளுக்கு அரசாங்கம் மதிப்பளிக்கவில்லை. கொழும்பு துறைமுக கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளாகி மூழ்கிய எம்.வி.எக்பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் தொழிற்துறை நிபுணர்கள் ஆரம்பத்தில் பல விடயங்களை குறிப்பிட்டார்கள். அவர்களின் ஆலோசனைகளுக்கு அரசாங்கம் மதிப்பளிக்கவில்லை. அதன் தாக்கத்தை இன்று மீனவர்கள் எதிர்க்கொள்கிறார்கள்.
சேதன பசளை திட்டம் விவசாயத்துறைக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சேதன பசளை திட்டம் நிலைபேறானதாயினும் அதனை கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்த வேண்டும். பூட்டான் 2008 ஆம் ஆண்டு முதல் சேதன பசளை திட்டத்தை கட்டம் கட்டமாக செயற்படுத்தி வருகிறது. இதுவரையில் முழுமையான இலக்கை அடையவில்லை.
விவசாய துறைசார் நிபுணர்களினதும், விவசாயிகளினதும் ஆலோசனைகளை பெறாமல் இரசாயன உரம் கடந்த மே மாதம் தடை செய்யப்பட்டது. முறையான திட்டமிடல் இல்லாமல் சேதன பசளை திட்டம் அறிமுகப்படுத்தியதன் விளைவை கடந்த 6 மாத காலமாக எதிர்க்கொண்டோம். தவறான தீர்மானத்தின் விளைவை இனிவரும் காலங்களில் எதிர்க்கொள்ள நேரிடும். அரசாங்கத்தின் செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன.
ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் உள்ள 11 பங்காளி கட்சிகள் அரசாங்கத்தில் இருந்து வெகுவிரைவில் வெளியேறலாம். சிறந்த நிர்வாக முகாமைத்துவம் இல்லாத காரணத்தினால் சமூகத்தின் மத்தியில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத நிலை காணப்படுகிறது என்றார்.