நுவரெலியா மற்றும் தலவாக்கலையில் இத் தைப்பொங்கல் விழா இன்று காலை கொண்டாடப்பட்டது.
தலவாக்கலை நகரில் கொண்டாடப்பட்ட மத்திய மாகாணத்தின் தேசிய தைப்பொங்கல் விழா, மத்திய மாகாண விவசாயதுறை இந்து கலாச்சார அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன் தலைமையில் காலை 10 மணியளவில் தலவாக்கலை நகரில் கதிரேசன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் ஆகியோர் உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், ஏ.பி.சக்திவேல், பிலிப்குமார் ஆகியோருடன் மத்திய மாகாண வலய கல்வி பணிப்பாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் இதன்போது கலந்து கொண்டனர்.
இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமான தைப்பொங்கல் விழாவின்போது, சிறப்பு ஊர்வலமும் இடம்பெற்றது.
இதற்கமைய நுவரெலியா-ஹட்டன் வீதியில், தலவாக்கலை-லிந்துலை நகரசபை அருகில் இருந்து, கதிரேசன் ஆலய மண்டபம் வரை இந்து கலாச்சார விழுமியங்களை ஏற்ற கலாச்சார நிகழ்வுகளுடன் பேரணி இடம்பெற்றது.
பிரதான வீதியில் கோலப்போட்டிகளும், கதிரேசன் மண்டப அருகில் பொங்கல் நிகழ்வும் இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதேவேளை கதிரேசன் மண்டபத்தில் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.