புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதன் மூலம், இனப்பிரச்சினைக்கு ஒர் அரசியல் தீர்வைக் காண முடியுமா, எந்த வகையில் அது சாத்தியம் என்பதை பரிசீலனை செய்ய வேண்டிய நிலைமை உருவாகியிருக்கின்றது.
இந்த நிiலையில் எதிரும் புதிருமாக இருந்து கொண்டு புதிய அரசியலமைப்பில் முன்கூட்டியே இணக்கப்பாடு ஒன்றை எட்டாமல் தீர்வு காண்பது சாத்தியம் என்று கூறுவதற்கில்லை.
ஏனெனில், வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம், பகிர்ந்தளிக்கப்பட்ட இறைமையின் அடிப்படையில் சமஸ்டி ஆட்சிமுறையிலான ஆட்சி முறைமை என்பவற்றையே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசியல் தீர்வின் அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.
ஆனால், இந்த அடிப்படை விடயங்களில் எதையும் விட்டுக் கொடுப்பதற்கு அரச தரப்பு தயாராக இல்லை என்பதை பல தடவைகள் அவர்கள் உறுதியாகக் கூறிவிட்டார்கள். ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்துள்ள இந்தச் சந்தர்ப்பமே, அரசியல் தீர்வு காண்பதற்கான ஓர் ஒப்பற்ற சந்தர்ப்பமாகக் கருதப்படுகின்றது.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முற்படும் போதெல்லாம் எதிரும் புதிருமாக இருந்து, அதனை முளையிலேயே கிள்ளி விடுகின்ற அரசியல் போக்கிரித் தனத்தையே இந்தக் கட்சிகள் கடந்த காலங்களில் கையாண்டு வந்தன.
இந்த நிலையில் அந்தக் கட்சிகள் இரண்டும் ஆட்சி அதிகாரத்தில் இணைந்துள்ள நேரத்தில் அவர்களின் இணக்கத்துடன் ஓர் அரசியல் தீர்வைக் கண்டுவிட வேண்டும். இது மிகவும் முக்கியமான சந்தர்ப்பம் என்பதை எல்லோருமே நன்கு உணர்ந்திருக்கின்றார்கள்.
ஆயினும் அரசியல் தீர்வு விடயத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ள அரசாங்கமும், தமிழர் தரப்பும் அடிப்படையான விடயங்களில் எட்டாத தொலைவிலேயே நின்று கொண்டிருக்கின்றன.
இணக்கப்பாடு எதுவுமில்லாமல் எந்தப் பிரச்சினைக்கும் நிரந்தரமான ஒரு தீர்வைக் காண முடியாது. இனப்பிரச்சினை விவகாரத்தில் இரு தரப்பிலும் மிகவம் உறுதியான இணக்கப்பாடு அவசியம்.
அத்தகைய இணக்கப்பாடு இல்லாமல் எட்டத்தில் இருந்து கொண்டு ஒருவரையொருவர் தமது நிலைப்பாட்டை மாத்திரமே விட்டுக் கொடுக்காமல் கட்டிப் பிடித்துக்கொண்டிருந்தால், தீர்வு என்பது மாய மானாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
புதிய அரசியலமைப்பில் எத்தகைய ஆட்சி முறையைக் கொண்டு வருவதென்பதை வரையறுத்து உள்ளடக்க வேண்டியது அவசியம். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள வரையறையற்ற அதிகாரங்களை எவ்வாறு வரையறுத்துக் குறைப்பதென்பதையே, ஆட்சி முறையில் மாற்றம் கொண்டு வருகின்ற விடயத்தில், சிங்கள அரசியல் தலைவர்களின் கவனம் குவிந்திருக்கின்றது.
ஒற்றையாட்சியில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்ற தமிழ் அரசியல் தலைவர்களின் தேவை அவர்களுக்குக் கிடையாது. அதுமட்டுமல்லாமல், ஒற்றையாட்சியை மாற்றி சமஸ்டி முறைக்குச் செல்வதன் மூலம் நாடு இரண்டாகப் பிளவுபட்டுவிடும் என்பது அவர்களின் அரசியல் நம்பிக்கை.
சமஸ்டி என்பது, நாட்டை ஒருமைப்பாட்டுடன் வைத்திருப்பதற்கான ஓர் அரசியல் வழிமுறையாகும். அது அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டு ஆட்சியைப் பரவலாக்கி நடத்துகின்ற ஒர் அரசியல் உத்தி என்றுகூடக் குறிப்பிடலாம்.
இதன் மூலம் ஆட்சிப் பொறுப்புக்களை அந்தந்தப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களின் கைகளிலேயே பொறுப்பித்துவிட்டு, மத்திய அரசாங்கம் தனது ஆட்சி நிர்வாகச் சுமைகளைக் குறைத்துக் கொள்ள முடியும். அது நாட்டை முழுமையான நல்லதொரு எதிர்காலத்தை நோக்கி வழிநடத்திச் செல்வதற்குப் பேருதவியாகவும் அமையும்.
அரசியல் தெளிவுபடுத்தல் அவசியம்
தென்னிலங்கையின் பல அரசியல்வாதிகளும், சிங்கள மக்களும் சமஸ்டி என்றால் தீண்டத்தகாததோர் அரசியல் நடைமுறை என்ற மாயைக்குள் சிக்கியிருக்கின்றார்கள். நாட்டில் சுமார் அறுபது வருடங்களாகத் தொடர்ந்து புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணாமல், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றவும், அதனைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்கும் இந்த அரசியல் மாயை தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு சாதகமாக அமைந்திருக்கின்றது.
இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்காக, சமஸ்டி ஆட்சி முறையே உகந்தது என்று தமிழர் தரப்பில் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. இதன் அடிப்படையிலேயே தனிநாட்டுக் கோரிக்கை எழுந்தது. அந்தக் கோரிக்கையின் அடிப்படையிலேயே ஆயுத மோதல்களும் உருவாகியிருந்தன.
எனவே, நாட்டைப் பிரிப்பதற்கு சமஸ்டி கோரிக்கையே அடிப்படையானது. அதற்கு இணங்கிச் செல்வதன் மூலம் நாட்டைத் துண்டாடுவதற்குத் தமிழ் அரசியல்வாதிகளுக்கு வழியேற்படுத்திக் கொடுத்ததாக அமைந்துவிடும் என்று சிங்கள அரசியல்வாதிகள் உறுதியாக நம்புகிறார்கள்.
சமஸ்டி முறையின் மூலம் ஆட்சி அதிகாரங்களைப் பிரதேச ரீதியாகப் பகிர்ந்தளித்தால், மத்திய அரசாங்கத்தில் உள்ளவர்கள் அதிகாரமற்றவர்களாகவும், மக்கள் மத்தியில் அரசியல் செல்வாக்கை இழந்தவர்களாகவும் ஆகிவிடக் கூடும் என்ற அச்சமும் அவர்களிடம் காணப்படுகின்றது.
மத்திய அரசாங்கத்தில் தங்களிடம் ஆட்சி அதிகாரங்கள் அதிகமாக இருந்தால்தான் அரசியல் செல்வாக்கைத் தொடர்ந்து பேண முடியும் என்பதும் அவர்களின் நம்பிக்கை.
இந்த நிலையில் தென்னிலங்கை அரசியல்வாதிகளிடமும், அவர்களைப் பின்பற்றிச் செயற்படுகின்ற சிங்கள மக்களிடமும், ஒற்றையாட்சி தொடர்பில் மனமாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.
இதற்காக சமஸ்டி பற்றிய தெளிவை அவர்களிடத்தில் ஏற்படுத்தவதற்கான முயற்சிகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஈடுபட்டிருந்திருக்க வேண்டும்.
இதுகால வரையில் சமஸ்டியைப் பற்றி தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமே தமிழ்த்தலைவர்கள் பேசி வந்துள்ளார்கள். விவாதம் நடத்தியிருக்கின்றார்கள்.
ஆனால் சிங்கள மக்கள் மத்தியிலோ, ஏன் அவர்களுக்கு நெருக்கமாக உள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியிலும்கூட அதைப்பற்றிய தெளிவை ஏற்படுத்த அவர்கள் முயற்சித்திருக்கவே இல்லை.
நேரடி பேச்சுவார்த்தைகளின் மூலமே ஓர் அரசியல் தீர்வைக் காணலாம் என்ற நிலைப்பாடு மாற்றம் பெற்றுள்ளது. நாட்டின் இரண்டு பெரிய கட்சிகளும் இணைந்து அமைத்துள்ள நல்லாட்சி அரசாங்கத்தில் கூட நேரடிப் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு காணலாம் என்ற நிலைப்பாடு வலுவற்றதாக மாறியிருக்கின்றது.
நாட்டின் புதிய அரசியலமைப்பை முழுமையாக மாற்றி புதிதாக ஓர் அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் தீர்வை எட்ட முடியும் என்ற புதிய பாதையில் அரசியல் தலைவர்கள் அடியெடுத்து வைத்துள்ளார்கள்.
ஆனாலும், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு முன்னதாக அரசியல் தீர்வுக்குரிய வழிமுறைகள் என்ன, அவற்றுக்கு ஏற்ப எவ்வாறான அம்சங்களை, எந்த வகையில் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கலாம் என்று சிந்தித்திருக்க வேண்டும்.
அந்தச் சிந்தனையின் அடிப்படையில் இரு தரப்பினரும் பேச்சுக்கள் நடத்தி ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். இது நடைபெறவில்லை.ஆனால், புதிய அரசியலமைப்பு தெரு முனையில் வந்து எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கின்றது.
இந்த வேளையில்தான், இனப்பிரச்சினைக்கு அப்படி தீர்வு காண வேண்டும். இப்படி தீர்வு காண வேண்டும் என்று கோஷமிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். வெற்றுக் கோஷங்களினால் எதுவும் ஆகப் போவதில்லை. அது வெறுங்கையில் முழம் போடுகின்ற வேலையாகும்.
இதனைத் தெரிந்து கொண்டுதான் இவ்வாறு கோஷமிடுகின்றார்களா அல்லது தெரியாத முறையில்தான் கோஷங்கள் எழுந்திருக்கின்றனவா என்பது தெரியவில்லை.
தீர்வுக்கான பேச்சுக்களம்
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக நாடாளுமன்றம் சட்ட நிர்ணய சபையாக மாற்றப்பட்டிருக்கின்றது. அதற்கென வழிகாட்டல் குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருக்கின்றது.
அதன் கீழ் ஆறு உபகுழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. ஆறு முக்கிய தலைப்புக்களில் விடயங்கள் தொகுக்கப்பட்டு, அவை குறித்து மக்கள் கருத்தறியப்பட்டு, அறிக்கைகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.
அந்த அறிக்கைகளில் உள்ள விடயங்கள் குறித்து சட்ட நிர்ணய சபையாகிய நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு ஏற்பாடகியுள்ளது.
அதேவேளை, 45 தடவைகள் கூடி விடயங்களைக் கலந்தாலோசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையும் விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்தச் சூழலில்தான், இரு தரப்பிலும் இருந்து பல்வேறு வாதங்கள் பகிரங்கமாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ‘வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் – இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை’
ஒற்றையாட்சி வேண்டாம் – ஒற்றையாட்சியில் மாற்றமே கிடையாது’
‘சமஸ்டி முறையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் – சமஸ்டி பற்றி பேசவே மாட்டோம்’ – என்று வாதப் பிரதிவாதங்கள் சூடு பிடித்திருக்கின்றன.
பகிரங்கமாக அரசியல் பிரசார நடவபடிக்கைகளுக்கு ஒத்த வகையில் இவ்வாறு கருத்து மோதல்களில் ஈடுபட்டிருக்கின்ற பின்னணியில் இருநூற்றி இருபத்தைந்து உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் நேர் முரண் கொண்ட விடயங்கள் குறித்து விவாதம் நடத்தி ஒரு முடிவைக் காண முடியும் என்று எதிர்பார்க்க முடியாது.
அத்துடன் கடும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ள விடயங்களில் ஓர் இணக்கப்பாடு எட்டப்பட முடியும் என்று கூறவும் முடியாது.
ஏனெனில் நேரெதிர் முரண்பாடுகளைக் கொண்ட அபிவிருத்தி மற்றும் அரசியல் விடயங்கள் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்காக எடுத்துக் கொள்ளப்படும்போது, அதி உயர்ந்த அந்த சபையில் உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதை நாட்டு மக்கள் அடிக்கடி ‘கண்டு களிக்கின்றார்கள்.’
நாட்டு மக்கள் முகம் சுழிக்கின்ற வகையிலேயே இந்த வருடத்திற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வையும், பிரமர் ரணில் விக்கிரமசிங்கவின், அம்பாந்தோட்டைக்கான அபிவிருத்தித் திட்டம் தொடர்பான விவாதத்தை நடத்தி முடித்திருக்கின்றார்கள்.
இந்த நிலையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயங்கள் தொடர்பில் புதிய அரசியலமைப்புக்கான விவாதத்தின்போது எவ்வாறு சபை உறுப்பினர்கள் நடந்து கொள்வார்கள், எவ்வாறு அவர்கள் இணக்கப்பாட்டிற்கு வரப் போகின்றார்கள் என்பது ‘சுவராசியமான’ விடயமாகவே இருக்கும்.
நாட்டின் எதிர்கால நலன்களை அடிப்படையாகக் கொண்டு, ஆக்கபூர்வமான முறையில் நிதானமாகவும், பொறுப்போடும் விடயங்களைக் கலந்து பேசி, விவாதித்து, ஒரு நல்ல முடிவுக்கு வருவார்களான என்பது தெரியவில்லை.
அதற்குரிய வாய்ப்புக்கள் அரிதாகவே இருக்கும் என்றுதான் எண்ணத்தோன்றுகின்றது.
ஏன் முடியாது?
அரசியல் தீர்வு காண்பதென்பது ஓர் இலகுவான காரியமல்ல. இது அனைவரும் அறிந்த இரகசியம். அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் கடந்த காலத்தில் கசப்பான அனுபவங்களையே தந்திருக்கின்றன.
இதனால் பேச்சுவார்த்தைகளில் மக்கள் நம்பிக்கை இழந்திருக்கின்றார்கள்.
பேச்சுக்கள் நடத்தியவர்களும், இனிமேல் பேச்சக்களை நடத்தப் போகின்றவர்களும்கூட நம்பிக்கை இழந்த நிலையிலேயே காணப்படுகின்றார்கள்.
ஆனாலும், அரசியல் தீர்வு என்பது காண முடியாத விடயமல்ல. அதற்கான முயற்சிகள் சரியான முறையில், உளப்பூர்வமான வகையில் முன்னெடுக்கப்படுமேயானால், அது நிச்சயம் வெற்றியளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கடினமான காரியங்களை சரியான முறையில் கையாண்டு வெற்றிகண்ட அனுபவம் நாட்டின் அரசியல் தலைவர்களுக்கு உண்டு. இல்லையென்று சொல்வதற்கில்லை.
அடக்குமுறை ஆட்சி நடத்திய முன்னைய அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக அரசியல் தலைவர்கள் மட்டத்தில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் இரகசியமாகத் திட்டம் தீட்டப்பட்டிருந்தது.
இராணுவப் புலனாய்வாளர்களும் ஏனைய தகுதிவாய்ந்தவர்களும் எதிரணியினருடைய நடவடிக்கைகளைக் கூர்ந்து அவதானித்து கண்காணித்துக் கொண்டிருந்த சூழலிலும், அந்த இரகசியத் திட்டத்திற்கான சந்திப்புக்கள், கலந்துரையாடல்கள் என்பன கச்சிதமாக நடத்தப்பட்டிருந்தன.
அவ்வாறு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் இரகசியமான திட்டம் என்பவற்றின் ஊடாகவே முன்னாள் மகிந்த ராஜபக்சவுடன் நெருக்கமாகச் செயற்பட்டிருந்த மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் மிகவும் சாதுரியமாக மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருந்தார்.
அது மட்டுமல்லாமல், புதிய ஆட்சியை எவ்வாறு உருவாக்குவது என்பதற்கான திட்டத்தையும் வெகு சாதுரியமாகத் தீட்டி, நடைமுறைப்படுத்தியிருந்தார்கள்.
இந்த அரசியல் மாற்றத்திற்கு வெளிநாடுகளின் உதவிகளும் ஒத்துழைப்பும் இருந்ததன் காரணமாகவே அது வெற்றிகரமாக நடந்தேறியது என்று பலரும் காரணம் கூறலாம்.
ஆயினும் அந்த அனுபவத்தைப் பயன்படுத்தி, அரசியல் தீர்வுக்கான அடிப்படைப் பேச்சுக்களை நடத்தி, கொள்கை அளவிலானதோர் இணக்கப்பாட்டிற்கு இரு தரப்பினரும் வந்திருக்கலாம். அல்லது அத்தகையதோர் இணக்கப்பாட்டிற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கலாம்.
அத்தகைய இணக்கப்பாடு ஏற்கனவே எட்டப்பட்டிருக்கின்றதா என்பது தெரியவில்லை. அவ்வாறு இதுவரையில் எட்டப்படவில்லையானால், இனிமேலாவது ஏன் அத்தகையதொரு முயற்சியை முன்னெடுக்கக் கூடாது?
கொள்கையளவில் அரசாங்கமும். தமிழர் தரப்பும் ஓர் இணக்கப்பாட்டுப் புள்ளியில் ஒன்றிணைந்து கொண்டதன் பின்னர், புதிய அரசியலமைப்புக்கான விவாதங்களின் போது, அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை முன் நகர்த்தி சாதுரியமாக ஓர் அரசியல் தீர்வை எட்டலாம்தானே? அதனை ஏன் செய்ய முடியாது?
இராஜதந்திர நடவடிக்கையே தேவை
அரசியல் தீர்வுக்கான பல சந்தர்ப்பங்களை சம்பந்தப்பட்ட தரப்பினர் கடந்த காலங்களில் வீணடித்திருப்பதாகப் பலரும் குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள்.
அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமலில்லை. அந்தக் குற்றச்சாட்டுக்குக் காரணமானவர்களே இன்று நல்லாட்சி அரசாங்கத்தில் ஒன்றிணைந்திருக்கின்றார்கள்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டரநாயக்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி பெற்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட்ட பலர் இதில் முக்கியமானவர்கள்.
ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியமைத்திருக்கின்றார்கள். இந்த நல்லாட்சிக்கு தமிழர் தரப்பில் இருந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி, அதன் செயற்பாடுகள் அனைத்துக்கும் முழுமையாக ஒத்துழைத்து வருகின்றார்.
ஆட்சி மாற்றத்தின்போதும், அவருடைய பங்களிப்பு மிகவும் முக்கியமான நிலையில் பெறப்பட்டிருந்தது. எனவே, இவர்கள் அனைவரும் சாதாரண நிலைமையில் இருப்பவர்களல்ல. அதிகார பலம் கொண்டவர்களாகவும் இருக்கின்றார்கள்.
இந்த நிலையில் அரசியல் தீர்வுக்கான கலந்துரையாடலைத் தங்களுக்குள்ளேயே நடத்தி ஓர் இணக்கப்பாட்டை எட்டி, அதன் அடிப்படையில் செயற்பட வேண்டும்.
அரசியல் தீர்வு குறித்து வெளிப்படையாகப் பேசினால், அல்லது முண்பாடான விடயங்கள் பற்றிய உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினால்தான் தேவையற்ற குழப்ப நிலைமை உருவாகும். அது நாட்டின் அமைதிக்கும் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்கும் பங்கம் விளைவிப்பதாக அமையும்.
அவ்வாறில்லாமல், சாதுரியமாக நகர்வுகளை மேற்கொண்டு, இராஜதந்திர ரீதியில் அதனைச் செயற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். அதன் ஊடாக இனப்பிரச்சினைக்கு முடிவு காண்பதற்குரிய அரசியல் தீர்வை எட்ட முடியும்.
அரசாங்கத்திற்கு எதிராக விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். அரச படைகள் மீது எதிர்பாராத வகைகளில், எதிர்பாராத இடங்களில் எல்லாம் தாக்குதல்களை நடத்தி அளப்பரிய சேதங்களை ஏற்படுத்தியிருந்தார்கள்.
பல சிங்களத் தலைவர்களைப் படுகொலை செய்தார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது. பல சிங்களப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள், பௌத்த விகாரைகள் மீதும் குறிப்பாக கண்டி தலதா மாளிகை மீதுகூட தாக்குதல் நடத்தியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது,
தலதா மாளிகை மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடைமுறை இன்னும் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் கண்டிப்பிரதேச மக்கள் அந்தப் பகுதியில் பிரயாணம் செய்யும்போது தேவையற்ற வகையில் அலையவும் வாகன போக்குவரத்து நெரிசலில் சிக்கி தமது நேரத்தை விரயமாக்கவும் நேர்ந்திருப்பதாக முறைப்பாடுகள் இருக்கின்றன.
இத்தகைய ஒரு நிலைமையில்தான் இராணுவத்தினரிடம் சரணடைந்தும், அவர்களால் கைது செய்யப்பட்டும் தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் அரசாங்கத்தினால் புனர்வாழ்வுப் பயிற்சியளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
இவ்வாறு அவர்கள் விடுதலை செய்யப்பட்டதை எவரும் எதிர்க்கவில்லை. சிங்களக் கடும் போக்காளர்களும்கூட கண்டு கொள்ளவில்லை.
எனவே, சாதுரியமான முறையில் முன்னெடுக்கப்படுகின்ற காரியங்களை எதிர்ப்புகளின்றி நிறைவேற்றலாம் என்பதை கடந்தகால அனுபவங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன. அந்த வகையில் செயற்பட வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகும்.