வெள்ளத்தில் தத்தளிக்கும் தூத்துக்குடி- முகாம்களில் 503 பேர் தஞ்சம்

264 0

தூத்துக்குடி மாநகரம் மழை வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டு இருக்கிறது. வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் 11 முகாம்களில் 503 பேர் தஞ்சம் அடைந்தனர்.

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதி கனமழை பெய்தது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. நேற்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவியது.

இதனால் தூத்துக்குடி மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டது. இந்த சிவப்பு எச்சரிக்கை நேற்று மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இன்றும் (சனிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக தூத்துக்குடி வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டு இருக்கிறது. முத்தம்மாள் காலனி, ரகுமத்நகர், தனசேகர்நகர், குறிஞ்சி நகர், ராஜீவ்நகர், கதிர்வேல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழைநீர் 2 அடி உயரத்துக்கு தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் வளாகம் மட்டுமின்றி சில வார்டுகளிலும் மழைநீர் சூழ்ந்து உள்ளது. இதனால் நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டனர். இதுதவிர மாநகர பகுதியில் 177 இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. தேங்கிய மழைநீர் மோட்டார்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அதன்படி நேற்று காலையில் 503 பேர் 11 முகாம்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

கனமழை காரணமாக தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் தண்டவாளம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் நேற்றுமுன்தினம் தூத்துக்குடியில் இருந்து புறப்படும் மைசூர் எக்ஸ்பிரஸ் 6 மணி நேரமும், சென்னை வரும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் 7 மணி நேரமும் தாமதமாக புறப்பட்டன.

அதே நேரத்தில் நேற்று சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த பயணிகள் அனைவரும் தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர்.