வீட்டு சமையல் எரிவாயு கொள்கலனின் செறிமானத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், இலங்கை தரநிர்ணய நிறுவகம் பொறுப்புக்கூற வேண்டும் என, நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று(26) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அதன் தலைவர் ரஞ்சித் வித்தானகே, இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சமையல் எரிவாயு கொள்கலன்களின் செறிமானத்தை பரிசோதிப்பதற்காக, விற்பனை நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு கொள்கலன் ஒன்று அரச இரசாயன பரிசோதனை திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி, சிலாபம், வெலிகம, பன்னிப்பிட்டி மற்றும் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் வீட்டுப் பாவனைக்கான எரிவாயு கொள்கலன்கள் வெடித்த சம்பவங்கள் பதிவாகி இருந்தன.
நேற்றுக் காலை 8 மணியளவில் நிக்கவரட்டிய பகுதியிலுள்ள வீடொன்றிலும் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
எரிவாயு கசிவு காரணமாகவா இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்வாறு எரிவாயு கசிவு ஏற்படுவதற்கு புதிதாக விநியோகிக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு கொள்கலனின் செறிமானத்தில் ஏற்பட்டுள்ள மாற்றமே காரணம் என்று குற்றம் சுமத்தப்படுகிறது.
இந்தநிலையில், சந்தையில் உள்ள எரிவாயு கொள்கலன்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.