பதுளை- தெமோதரை ஸ்ரீ கதிரேசன் கோவில் முன்பாக, பொலிஸ் சோதனைச் சாவடியைஅமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சியை பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தடுத்து நிறுத்தியுள்ளார்.
ஏற்கனவே, இப் பொலிஸ் சோதனைச் சாவடி தெமோதரை மக்கள் வங்கிக் கிளைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்தது.. இச் சோதனைச்சாவடி அப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பெரும் இடையூராக இருப்பதால், அதனை அகற்றுமாறு, கோரி மக்கள் எதிர்ப்புகளை முன்வைத்தனர்.
அதையடுத்தே, இந்த சோதனைச் சாவடியை, தெமோதரை ஸ்ரீ கதிரேசன் கோவிலுக்கு முன்பாக அமைக்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. இவ்விடயம் தொடர்பாக, மேற்குறிப்பிட்ட ஆலய பரிபாலன சபையினர், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
இதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர், ஊவா மாகாண பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, குறித்த சோதனைச் சாவடியை பிறிதொரு இடத்தில் அமைக்க ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையடுத்து, ஊவா மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் உடனடி உத்தரவின் பேரில், ஸ்ரீ கதிரேசன் கோவிலுக்கு முன்பாக அமைக்கப்படவிருந்த சோதனைச் சாவடிக்கான நடவடிக்கைகள் முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.