முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட கூழாமுறிப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு சென்ற மக்களை வழிபாடுகள் மேற்கொள்ளவிடாமல் இராணுவத்தினர் தடுத்ததால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது.
கூழாமுறிப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஆயத்தமான போது அங்கு சென்ற இராணுவத்தினர் இன்று பூசைகளை செய்ய முடியாது எனவும் வேறு ஒரு நாளில் பூசை செய்யுமாறும் கூறியுள்ளனர் இதனால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது.
இந்நிலையில் மக்களின் அழைப்பின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இ.சந்திரறூபன் அவர்கள் பூசை வழிபாடு செய்ய தடைவிதித்த இராணுவத்தினரிடம் நீங்கள் கூறுவது போன்று பூசை வழிபாடுகளை மாற்ற முடியாது எனவும் அவ்வாறு பூசை செய்ய கூடாது எனில் நீதிமன்ற தடை உத்தரவினை காண்பியுங்கள் என கோரியதோடு இது தொடர்பில் காவல்துறையினருக்கும் தகவல் கூறி சம்பவ இடத்துக்கு அழைத்திருந்தார்.
இன்னிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஒட்டுசுட்டான் காவல்துறையினர் மக்களை வழிபாட்டிற்கு அனுமதித்துள்ளதுடன் குறித்த ஆலய முன்றலில் சூழப்பட்ட பாதுகாப்பு தரப்பினர் விலகி சென்றுள்ளார்கள் ஆலயத்தில் நளையும் பூசை நடைபெறவுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
குறித்த சம்பவம் காரணமாக சுமார் ஒன்றரை மணித்தியாலங்களின் பின்னரே பூசை வழிபாடுகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்த காலப்பகுதியில் ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள கூட மக்கள் அச்ச உணர்வுடன் வழிபாடுகளை மேற்கொள்ளவேண்டிய நிலை முல்லைத்தீவில் காணப்படுகின்றது.