பொலன்னறுவை வெலிக்கந்த சந்துன்பிட்டிய கிராமத்திலுள்ள வீடொன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பலத்த காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயதுடைய திருமணமான பெண் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் வெலிகந்த, சந்துன்பிட்டிய, இலக்கம் 68 இல் வசிக்கும் பி.ஜி. ஆயிஷா குமுதுனி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இடம்பெற்றபோது வீட்டில் எவரும் இல்லாமையால் அயலவர்கள் வருகை தந்து சமையல் அறை முழுவதும் எழுந்த தீயை அணைத்து குறித்த பெண்ணை வெலிக்கந்த பிரதேச வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
கடந்த 13ஆம் திகதி வீட்டின் சமையலறையில் எரிவாயு அடுப்பை பற்ற வைக்கச் சென்ற போது அது எரியாததால் தீக்குச்சியால் பற்ற வைக்க முற்பட்ட போது எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பிரதேசவாசிகள் வெலிக்கந்த பொலிஸில் முறைப்பாடு செய்ததை யடுத்து சடலத்தை இன்று தகனம் செய்வதற்காக உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாக வெலிக்கந்த பொலிஸ் பொறுப்பதிகாரி சமந்த ரத்நாயக்க தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக வெலிக்கந்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சம்பவம் தொடர்பாக விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று இறுதிச் சடங்கு செய்ய வென குடும்பத்தாரிடம் குறித்த பெண்ணின் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் கொள்வனவு செய்த சிலிண்டர் இவ்வாறு வெடித்தமையால் தனது மகள் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்து விட்டதாக பெண்ணின் தந்தையான திம்புலாகல பகுதியைச் சேர்ந்த 51 வயதான பி.ஜி. ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக உரிய அதிகாரிகள் விசேட விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜெயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.