தகுதியான விசா வைத்திருப்பவர்கள் ஆஸ்திரேலியா வரலாம்: பிரதமர் ஸ்காட் மோரிசன்

248 0

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், தற்போது தளர்வுகள் அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. பின்னர், பொருளாதார வீழ்ச்சியை கருத்தில் கொண்டு தளர்வுகள் அளித்தன. ஆனால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள், தங்களது நாட்டு எல்லைகளை திறப்பதில் மிகவும் கவனமாக இருந்தன.
இதனால் ஆஸ்திரேலியா செல்லும் வெளிநாட்டினருக்கு சிரமம் ஏற்பட்டது. மாணவர்கள் தங்களுடைய படிப்பை தொடர முடியாமல் தவித்தனர்.
தற்போது பெரும்பாலான நாடுகள், அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியின் இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டால் அனுமதி அளித்து வருகின்றன. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியா சமீபத்தில்தான் கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கொடுத்தது.
இந்த நிலையில் டிசம்பர் 1-ந்தேதியில் இருந்து தகுதியான விசா வைத்திருப்பவர்கள், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் ஆஸ்திரேலியாவுக்கு தாராளமான வரலாம். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்வதற்கு சுற்றுப்பயண விலக்கு பெற வேண்டிய அவசியமில்லை என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த நாட்டில்  நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.