மனிதாபிமான நெருக்கடியைத் தவிர்க்க ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் கூட்டுப் பொறுப்பு சர்வதேச சமூகத்திற்கு உள்ளது என இம்ரான் கான் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள உணவு பொருட்களின் நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்தியா 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக அனுப்ப உள்ளதாக அறிவித்தது. மேலும், இந்த பொருட்களை வாகா எல்லையை கடந்து பாகிஸ்தான் வழியாக அனுப்ப அனுமதிக்கும்படி பாகிஸ்தானிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதனை ஏற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், போக்குவரத்து நடைமுறைகள் இறுதி செய்யப்பட்ட பிறகு, ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான முறையில் இந்தியா 50,000 மெட்ரிக் டன் கோதுமையை அனுப்ப அனுமதி அளிக்கப்படும், என்றார்.
புதிதாக நிறுவப்பட்ட ஆப்கானிஸ்தான் அமைச்சர்கள் ஒருங்கிணைப்புப் பிரிவின் முதல் உயர்மட்டக் குழுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய இம்ரான் கான், மனிதாபிமான நெருக்கடியைத் தவிர்க்க ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் கூட்டுப் பொறுப்பு சர்வதேச சமூகத்திற்கு உள்ளது என்றார்.
தற்போது, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானை இந்தியாவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய மட்டுமே அனுமதிக்கிறது. ஆனால் எல்லை வழியாக வேறு எந்த இருவழி வர்த்தகத்தையும் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.