பெண் எம்.பிக்கள் மீது வாய்மொழி ‘வசை’

195 0
பாராளுமன்றத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், வாய்மொழி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துகின்றமை தொடர்பில், பாராளுமன்றத்தின் பெண் உறுப்பினர்கள் மன்றத்தின் தலைவர், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே, சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

அண்மையில், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால், பெண் எம்.பியொருவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட கருத்து தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு, சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளேயின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னரும் உயரிய சபையான பாராளுமன்றத்தில், பெண் உறுப்பினர்களுக்கு எதிராக வாய்மொழி துஷ்பிரயோகங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இது ஜனநாயகத்தை மதிக்கும் சமூகத்தில் நல்ல முன்னுதாரணமாக அமையாது எனத் தெரிவித்துள்ளார்.

சட்டத்தை உருவாக்கும் இடமொன்றில் அதற்கு பங்களிக்கும் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் பெண்கள், அந்த இடத்திலேயே வாய்மொழி துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகிறார் எனின், இதன்மூலம் ஒட்டுமொத்த சமூகத்தின் சீரழிவும் புலப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர், வேலைத்தளங்கள், பொது பயணிகள் பஸ் சேவை, தெருக்கள் உள்ளிட்ட இடங்களில் பெண்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் உயரிய நிறுவனம் ஒன்றில் பெண் உறுப்பினர் ஒருவருக்கு  எதிரான வாய்மொழி துஸ்பிரயோகம் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது என்றார்.

பெண்களுக்கு எதிரான வன்முறையானது, ஒரு சிக்கலான சமூகப் பிரச்சினையாகவும் அடிப்படை மனித பிரச்சினையாகவும் மாறியுள்ளது. எனவே தகாத வார்த்தைகளால் திட்டுவது, வாய்மொழி துஷ்பிரயோகம், அவமானப்படுத்தல், விமர்சித்தல் என்பன சர்வசாதாரணமாக இடம்பெறுவதுடன், மீயுயர் சபைக்குள்ளும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றமை துரதிஷ்டவசமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறைவான மட்டத்தில் இருக்கும் சந்தர்ப்பத்தில், பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 12 பெண் உறுப்பினர்களின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் பாராளுமன்றத்தில் கருத்தாடல்கள் இடம்பெறுவதற்கான சூழலை ஏற்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.