வறட்சிக்கு முப்படையினர் மூலம் நிவாரணப் பணிகள் – மைத்திரி!

386 0

12642951_750145411785940_6899310605158783332_nநாட்டில் தற்போது வறட்சி நிலவிவரும் நிலையில் முப்படையினர் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவார்கள் என ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் சீனன்குடாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் இப்போது மழை இன்மையால் பல பிரதேசங்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை தனதுரையில் தெரிவித்த அவர் தற்போது ‘இந்த வறட்சியானது நாடு முகங்கொடுத்துள்ள பிரதான சவால்’ எனவும் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சிவில் அதிகாரிகளுடன் முப்படையினரையும் இணைந்து ஈடுபடுத்துவது தொடர்பாக நேற்று முன்தினம் பாதுகாப்பு செயலாளர் மற்றும் கடற்படை தளபதியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வறட்சியினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு குடிநீர் வழங்கல், ஏனைய நலன்புரி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள படையினர் எதிர்காலத்தில் தேவைப்படும்போது உணவு விநியோக நடவடிக்கைகளிலும் ஈடுபடுவர் எனவும் தெரிவித்துள்ளார்.