கைது செய்யப்பட்ட 4 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாநகர் பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 51). திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த இவர், ஆடு திருடர்களால் நேற்று முன்தினம் இரவு கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, பூமிநாதன் கொலை குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. திருச்சியில் இருந்து கொலை சம்பவம் நடந்த புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதி வரை அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் தீவிர ஆய்வு செய்து அதன் மூலம் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஆடு திருடும் கும்பல், தஞ்சை- திருச்சி எல்லையில் இருக்கக்கூடிய கல்லணைக்கு அருகே பதுங்கி இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து, தஞ்சையை சேர்ந்த 10 வயது மற்றும் 17 வயது சிறுவர்கள், 19 வயது இளைஞர் உள்பட 4 பேரை இன்று அதிகாலை 4 மணியளவில் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
இவர்கள் 4 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆதாரங்கள் மற்றும் முதற்கட்ட விசாரணைக்கு பிறகு, 4 பேரையும் புதுக்கோட்டை கீரனூர் பகுதிக்கு உப்பட்ட காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.