2022ஆம் பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாகத் தெரிவித்த ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ, பட்ஜெட் எவ்வளவு பலவீனமாக காணப்பட்டாலும் அரச சேவைகள் செயற்படுத்தப்படவேண்டும் என்றார்.
பட்ஜெட்டை தோற்கடிக்க வேண்டுமாயின் மாற்று அரசாங்கம் ஆட்சியமைக்க தயாராக இருக்க
வேண்டும் . அவ்வாறு இல்லையென்றால் பட்ஜெட் நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு
செய்யாவிட்டால் அரச சேவைகள் வீழ்ச்சியடையும் என்றார்.
தலதா மாளிகைக்கு நேற்று முன்தினம் (20) விஜயம் செய்திருந்த அவர், வழிபாட்டுகளின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், இந்த அரசாங்கத்தை வீட்டுக்குத் துரத்திவிட்டு, புதிய அரசாங்கத்தை உருவாக்குவதே பலரது எதிர்பார்ப்பாகக் காணப்பட்டாலும் நிரந்த வேலைத்திட்டம் ஒன்று இன்மை காரணமாக, அதற்கு சில காலம் செல்லும் என்றும், ஆனால் தற்போது செல்லும் முறையில் அது மிக விரைவாக நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.ஒரு நாட்டின் வருமானத்தை இலக்காக வைத்து, அரசின் வருமானம் எப்படி செலவு செய்யப்படுகிறது என்பதை அடிப்படையாக வைத்தே பட்ஜெட்டின்
தேவை காணப்பட வேண்டும்.
அத்துடன் வருமானம் மற்றும் அரசாங்கத்தின் செலவு என்பவற்றுக்கு இடையிலான இடைவெளி அதனை எவ்வாறு குறைப்பது என்பதை புள்ளிவிபரங்களுடன் பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும். ஆனால், இந்த பட்ஜெட்டில் புள்ளிவிபரங்கள் எதுவும் முன்வைக்கப்படாததால், இதனால் மக்களுக்கு எவ்வித பயனுமில்லை என சுட்டிக்காட்டினார்.
யுகதனவி கொடுக்கல் வாங்கலை நிறுத்துவதற்கு நாம் 100 சதவீதம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம். அது பாரிய மோசடி எனத் தெரிவித்த அவர், அமெரிக்க
பிரஜையொருவர் நள்ளிரவில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளமையால் அவர் அமைச்சு மற்றம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
தான் கட்சியொன்றை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அரசியல் அடிமையல்ல எனத்
தெரிவித்த அவர், எனவே அரசியல் அடிமைகள் ஆக வேண்டாமென மக்களிடம்
கேட்டுக்கொள்கின்றேன். அதிலிருந்து மீளும் வரை நாட்டை கட்டியெழுப்புவது கடினம் என்றார்.