இந்திய எல்லைப் பாதுகாப்பு படைகள் தொடர்ந்து கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக அப்துல் மொமன் குற்றம்சாட்டினார்.
இந்தியா-வங்காளதேச எல்லையில் கடந்த 12ம் தேதி இந்திய எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், வங்காளதேசத்தைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். மாடுகளை கடத்துவதற்காக எல்லையின் இருபுறமும் சுமார் 60 பேர் கொண்ட கும்பல் கூடியது. அவர்களை இந்திய எல்லைப் பாதுகாப்பு படையின் ரோந்துக் குழுவினர் தடுக்க முயன்றபோது, அவர்கள் ரோந்து குழுவினர் மீது கற்களை வீசத் தொடங்கினர். இரும்பு கம்பிகள் மற்றும் தடிகளால் தாக்கி உள்ளனர். தற்காப்புக்காக எல்லைப் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் எல்லையில் பதற்றத்தை உருவாக்கியது.
இந்திய-வங்காள எல்லையில் நடந்த கொலைகள் துரதிர்ஷ்டவசமானது என்று வங்காளதேச வெளியுறவு மந்திரி ஏ.கே. அப்துல் மொமன் தெரிவித்தார். இந்திய எல்லைப் பாதுகாப்பு படைகள், எல்லையின் முன்களப் பகுதியில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்று உயர்மட்டத்தில் இருந்து உறுதியளித்த போதிலும், வீரர்கள் தொடர்ந்து கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக அப்துல் மொமன் குற்றம்சாட்டினார்.