அருட் தந்தை சிறில் காமினி அடிகளாரை நாளை காலை 9.30 மணிக்கு மூன்றாவது நாளாக வாக்கு மூலம் அளிப்பதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வருமாறு சி.ஐ.டி.யினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
‘ வெபினார் ‘ (இணையத்தள சந்திப்பு) இல் நடத்தப்பட்ட கலந்துரையாடலொன்றின்போது அரச புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் சுரேஷ் சாலே குறித்து அருட் தந்தை சிறில் காமினி அடிகளால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் விசாரிப்பதற்காக கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்கள் வாக்கு மூலம் அளிப்பதற்காக அருட் தந்தை சிறில் காமினி சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 15 மற்றும் 16 ஆகிய இரு தினங்களில் மொத்தமாக 16 மணித்தியாலங்கள் அருட் தந்தை சிறில் காமினி சி.ஐ.டி.யினருக்கு வாக்கு மூலம் அளித்திருந்தார். இந்நிலையில், மூன்றாவது நாளாக நாளைய தினமும் அருட் தந்தை சிறில் காமினியிடமிருந்து வாக்கு மூலம் பெற்றுக்கொள்வதற்காக சி.ஐ.டி.யினர் மீண்டும் அழைத்துள்ளனர்.
முன்னதாக வாக்கு மூலம் அளிப்பதற்காக அருட் தந்தை சிறில் காமினி அடிகளார் தொடர்ச்சியான இரண்டு நாட்கள் (இம்மாதம் 15,16 திகதிகள்) சென்றிருந்தபோதிலும், தொடர்ச்சியான மூன்றாவது தினமாக சி.ஐ.டி.க்கு செல்வதை அவர் விரும்பவில்லை.
மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயத்தை தோற்றுவிக்கும் என்ற காரணத்தால், பிரிதொரு தினத்தன்று வருதாக கூறியிருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட சி.ஐ.டி யினர் நாளைய தினத்துக்கு (22) வருமாறு அருட் தந்தைக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையிலேயே நாளைய தினத்தன்று அருட் தந்தை சிறில் காமினி சி.ஐ.டிக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.