தமிழின விடுதலைக்காக இன்னுயிர் நீர்த்த எம் மாவீரருக்கான நினைவுநாள் ஆரம்பம்

796 0

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் எமக்காக இன்னுயிர் நீத்த எம் மறவர்களை நினைவுகூரும் மாவீரர் தின அனுஷ்டிப்பு வாரம் இன்று ஆரம்பமாகியுள்ளது.

எம் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தனது இன்னுயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்த முதலாவது மாவீரர் சங்கரின் நினைவாக, அவர் உயிரிழந்த கார்த்திகை 27ஆம் திகதி, விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் மாவீரர் தினமாக 1987ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைக்காய் உயிர் தியாகம் செய்த எம் மாவீரர்களை நினைவுகூரும் அஞ்சலிகள் நடைபெற்று வருகின்றன.

எம் மாவீரர்களின் நினைவுகளை அனுஷ்டிக்கும் வகையில் கார்த்திகை 21ஆம் திகதி மாவீரர் வாரம் ஆரம்பமாகிறது.

அந்த வகையில் மாவீரர் வாரத்தில் பல்வேறுவிதமான நினைவுதின மற்றும் அகவணக்க நிகழ்வுகளில் ஈழத்தமிழர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொள்வது வழமை.

அதேவேளை கார்த்திகை 27ஆம் திகதி இறுதி மாவீரர் தின நிகழ்வுகள் தமிழத்தில் மற்றும் புலம்பேர் தேசங்களில் உணர்வுபூர்வமான முறையில் இடம்பெறுவதுடன், மாவீரர்களின் உறவினர்கள், பெற்றோர், இனவிடுதலை உணர்வாளர்கள் எனப் பலரும் தமது அகவணக்கங்களை மாவீரர்களுக்கு அஞ்சலியும் செலுத்தி வருகின்றார்கள்.

இம்முறை மாவீரர் வார நிகழ்வுகளை நடத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின், சில காவல்துறை நிலையங்கள் விடுத்த கோரிக்கைக்கு நீதிமன்றங்கள் அனுமதி வழங்கியுள்ளன.

இதன்படி, கிளிநொச்சி மாவட்டத்தில் 51 பேருக்கு, மாவீரர் நினைவு தின நிகழ்வுகளை நடத்துவதற்குக் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

இதேவேளை, கோப்பாய் மற்றும் யாழ்ப்பாண காவல்துறை அதிகார பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் மாவீரர் நினைவு தின நிகழ்வுகளை நடத்துவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

முன்னதாக, முல்லைத்தீவு, முள்ளியவளை, மற்றும் வவுனியா காவல்துறை பிரிவுகளிலும், சிலருக்கு மாவீரர் தின நிகழ்வுகளை நடத்த நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.