இந்த முறை செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்தினால் தேர்வு எழுதுவதும், தேர்ச்சி பெறுவதும் கடினம் என்று மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கல்லூரிகளில் நேரடி வகுப்புக்கு பதிலாக ஆன்லைன் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டது. ஆன்லைன் மூலமே செமஸ்டர் தேர்வும் நடைபெற்றது. ஆன்லைன் தேர்வுகளில் வினாத்தாள் ஆன்லைனில் அனுப்பப்பட்டு மாணவர்கள் வீட்டில் இருந்தே தேர்வு எழுதினர்.
இப்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு பாடம் கற்பிக்கப்படுகிறது.
மேலும் நவம்பர், டிசம்பர் மாதத்துக்கான செமஸ்டர் தேர்வுகள் விரைவில் தொடங்கவுள்ளன.
இந்நிலையில் உயர்கல்வித்துறை, செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என்று அறிவித்தது. ஆனால் இந்த முறை செமஸ்டர் தேர்வை நேரடியாக இல்லாமல் ஆன்லைனிலேயே நடத்த வேண்டுமென மாணவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையே பெரும்பாலான மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆதரிக்கின்றனர்.
குறிப்பாக பொறியியல் கல்லூரிகள் நேரடி வகுப்புகளை நடத்தாமல் ஆன்லைன் வகுப்புகளையே நடத்தி வந்தன. நேரடி வகுப்புகள் துவக்கப்படவில்லை. நேரடி வகுப்புகளை நடத்தாமல் நேரடி தேர்வுகளை நடத்த அறிவித்திருப்பது கவலை அளிப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதாவது இந்த முறை செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்தினால் தேர்வு எழுதுவதும், தேர்ச்சி பெறுவதும் கடினம் என்று மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது சென்னை, மதுரை, புதுக்கோட்டை, சேலம், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் தேர்வு நடத்த வேண்டும் எனப் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட சில மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு கல்லூரி மாணவர்களுக்கு இந்த முறை செமஸ்டர் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்தவும், மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்ப பெறவும் நல்ல முடிவு எடுத்து மாணவர்கள் நலன் காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.