வடகிழக்கு பருவமழை- தமிழகத்தில் 61 சதவீதம் இதுவரை கூடுதலாக பெய்துள்ளது

315 0

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கிய பருவமழை பல்வேறு மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் 1-ந்தேதி முதல் இதுவரையில் பெய்த மழை அளவை கணக்கிடும்போது இயல்பைவிட 61 சதவீதம் கூடுதலாக பருவமழை பெய்திருப்பதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
வானிலை ஆய்வு மையம்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்தடுத்து உருவாகி தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததை அடுத்து ஒரு சில மாவட்டங்களில் கன மழையும், தரைக்காற்றும் வீசக்கூடும்.

தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் கடலோர ஆந்திரா, ராயலசீமா, கர்நாடகாவின் சில பகுதிகளில் கனமழை பெய்யும். தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக்கடல், தமிழக கடலோர பகுதிகளில் கடல் காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஒரு சில நேரங்களில் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசும்.

அடுத்த 24 மணிநேரத்துக்கு தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும். அதைத்தொடர்ந்து படிப்படியாக மழை குறையும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.