‘தை’ பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையின் வழியே புதிதாகப் பிறக்கும் ‘தை’ பிறப்பின் தடத்தில் எமது இலட்சியக் கனவான சுதந்திர தமிழீழத்தை வென்றெடுக்க உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைவோம்.
எமது உறவுகளைக் கொன்றொழித்து தாய் மண்ணை சுடுகாடாக்கி மாபெரும் இனப்படுகொலையை நிகழ்த்திய மகிந்த ராசபக்சேவை தண்டிக்க வேண்டுமென்ற கூட்டு மன உணர்வின் விளைவாக கடந்த சிறிலங்கா சனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேனா மற்றும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கமும் தமிழர்களை அழித்தொழித்து அடிமைப்படுத்தி சிங்கள பௌத்த பேரினவாத மேலாதிக்கத்தை இலங்கைத் தீவு முழுமைக்கும் நிலைநாட்டுவதிலேயே முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது.
சுதந்திர இலங்கையின் தொடக்கத்தில் இருந்த தமிழர் இனப்பிரச்சினைக்கான அத்தனை காரண காரியங்களும் மேலும் வலுவடைந்த நிலையில் இன்றும் நீடித்து வரும் நிலையில் உலகை ஏமாற்றும் ஒரே நோக்கத்திற்காக சில கண்துடைப்பு நடவடிக்கைகளை சிங்கள அரசு மேற்கொண்டு வருகின்றது.
பிராந்திய நலன் எனும் சுயநலன் சார் நிலைப்பாட்டிற்குள் தம்மைத் தாமே கட்டுண்டவர்களாக்கிக் கொண்டிருக்கும் உலக நாடுகள் தமக்கு ஒத்திசைவான போக்கில் செயல்படும் மைத்திரி-ரணில் கூட்டாட்சியின் கண்துடைப்பு நடவடிக்கைகளை இமாலைய முன்னேற்றமாக குறிப்பிட்டு அதனை அடிப்படையாகக் கொண்டு அவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றன.
இந்தப் பின்னணியில்தான், கடந்த ஆட்சிக்காலத்தின்போது சிறிலங்காவில் மோசமடைந்திருந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் அவை தொடர்பில் பொறுப்புக்கூறும் கடப்பாட்டை நிறைவேற்ற அப்போதைய ஆட்சியாளராக இருந்த மகிந்த ராசபக்ச தலைமையிலான அரசாங்கம் நிராகரித்து வந்ததை அடுத்து சிறீலங்காவிற்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை கடந்த 2010 ஆம் ஆண்டில் இரத்துச் செய்திருந்த நிலையில் தற்போது நிபந்தனைகளுடன் மீண்டும் வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்துள்ளது. ஆனாலும், ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீதான தடையை நீடிக்கச் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் இருக்கின்றன.
எமது ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலமே அதனை சாத்தியமாக்க முடியும். குறிப்பாக தாயகத்தில் நடத்தப்படும் மக்கள் போராட்டங்களே அதற்கான விதையாகும். சிறிலங்கா அரசின் கண்துடைப்பு நடவடிக்கைகளுக்குள் திருப்திப்பட்டுவிடாது எமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் வரை தொடர்ந்து போராட வேண்டியது காலத்தின் தேவையாகும். தாயகம்-தேசியம்-தன்னாட்சி உரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாட்டிற்கு வேட்டு வைக்கும் விதமாக வடக்கு கிழக்காக தமிழர் தாயகத்தை பிளவுபடுத்தியுள்ளார்கள். இதனை முறியடிக்க வேண்டுமாயின் எதிர்வரும் 21 ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறவிருக்கும் ‘எழுக தமிழ்’ எழுச்சி பேரணியில் அலைகடலென தமிழர்கள் அணியமாக வேண்டும்.
மைத்திரி-ரணில் கூட்டாட்சியின் நல்லாட்சி முகத்திரையை யாழ்.முற்றவெளி எழுக தமிழ் எழுச்சிப் பேரணி கிழித்தெறிந்திருந்தது. அந்நிலையினை மேலும் வலுவாக்கிட மட்டக்களப்பு எழுக தமிழ் எழுச்சிப் பேரணி மாபெரும் வெற்றிபெற வேண்டும். இவ்வாறு தாயகத்தில் நடைபெறும் மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டங்களை விதையாக்கி புலம்பெயர் செயற்பாட்டுத் தளம் வீச்சுப்பெறுவதன் மூலமே எமக்கான நீதியை பெற்றுக்கொள்ள முடியும்.
ஆகவே, ‘தை’ பிறப்பின் தடத்தில் துயரங்கள் நீங்கிய நல் வாழ்வின் விழியே விடுதலை வசமாகும் என்ற நம்பிக்கையுடன் தமிழ்ப் புத்தாண்டை எதிர்கொள்வோம். சலுகைகளுக்கு விலை போகாது உரிமைக்காய் உறுதியோடு போராடுவோம் என்ற திடமான நிலையெடுத்து பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டில் உலகத் தமிழர்கள் ஒன்றுபட்டு புது வேதம் செய்வோம்.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.’
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.