ஆயர்களால் மாவீரர் வாரத்தில் இறந்தவர்களை தனியாக நினைவுகூரும் நிகழ்வை தடுத்து நிறுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யுத்த காலத்திலும் முள்ளிவாய்க்கால் இன அழிப்புடனான இனப்படுகொலையின் பின்னரும் “மாவீரர் வாரம் “எழுச்சியோடு அனுஷ்டிக்கப்பட்டு தமிழ் தேச விடுதலை தியாகிகளுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. அது எமக்கிடையில் அரசியல் சிதைவுகளை தடுத்து தமிழர்களை தேசமாக சிந்திக்கவும் விடுதலை அரசியலை முனைப்போடு முன்னெடுக்கவும் வழிகோலியது. இதனை எமக்கு எதிரான சக்திகளால் ஜீரணிக்க முடியவில்லை என்பதுவே உண்மை.
இவ்வருடம் வடகிழக்கு ஆயர்கள் வெளியிட்டுள்ள “மதம் கலந்து இறந்தவர்களை நினைவு கூருவோம்” எனும் ஊடக அழைப்பு விடுதலை அரசியல் செயல்பாட்டு தேச சிந்தனைகளை தகர்த்து மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி அறிவிற்கு வித்திட்டு அரசியல் லாபம் தேடும் ஞானசார தேரரின் இன்னும் ஒரு வடிவமாக அமைந்து விடக்கூடாது என்பதுவே எமது எதிர் பார்ப்பு.
“தமிழர்களை அடக்கி அவர்களின் அரசியல் பூண்டோடு தகர்த்து விட்டோம்” என வருடந்தோறும் வெற்றி விழா எடுப்பவர்கள்; முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத, மதவாத சிந்தனையை கொம்பு சீவி அவர்களுக்கு எதிரான வன்முறையை தூண்டிவிட்டனர். இதில் ஞானசார தேரரின் பங்கு மிக அதிகமானது. அதில் அரசியல் குளிர்காய்ந்ததோ வேறு சிலர்.
இவர்களின் அடிவருடிகளுக்கு வடகிழக்கில் இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையில் முரண்பாட்டை தோற்றுவித்து உள்ளக வன்முறையை தூண்டிவிடும் நோக்கமும் உள்ளது. தேச விடுதலை அரசியல் செயற்பாட்டு பயணத்தை சிதைக்க வேண்டும் என்பதே இதன் உள் நோக்கமாகும். இதற்காக முன்னெடுத்த முயற்சிகளில் தோல்வி கண்ட நிலையில் தமிழர்களின் உயிரோடு கலந்த மாவீரர் வாரத்தில் கைவைத்து விட்டனரோ என்று சிந்திக்கத் தோன்றுகின்றது.
அண்மையில் ஞானசார தேரர் மடு பிரதேசத்தில் மக்களின் காணிப் பிரச்சினையை தீர்ப்பதாக கூறி சென்றபோது அவர் வரும் வழியில் மலர் தூவி வரவேற்றனர்.இது மதங்களுக்கிடையிலான முரண்பாட்டை மலர் தூவி வரவேற்பதற்கு ஒப்பாகும். அதனைத் தொடர்ந்தே ஆயர்கள் மதம் கடந்து இறந்தவர்களை நினைவு கூருவோம் என்று தனித்து முடிவெடுத்து அதனை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளனர் இது ஞானசார தேரரின் இன்னுமொரு முகமாகவே தோற்றமளிக்கின்றது.
யுத்தத்தின் பின்னர் அன்றாட தேவைகளுக்கும், யுத்த படுகொலைக்கும்,உறவுகளை காணாமல் ஆக்கப்பட்டமைக்கும், அரசியல் கைதிகளின் விடுதலைக்கும் என மக்கள் போராடுகின்றனர். தொடரும் இன அழிப்பிற்கு எதிராகவும் தினமும் போராட்டம் நடத்துகின்ற சூழ் நிலையில் இப்போராட்டத்தினை சிதைக்கும் ஒரே வழி எமக்கிடையில் பிளவை தோற்றுவிப்பது நோக்கம் கொண்ட சர்வதேச சக்திகள் புலம்பெயர்ந்து வாழும் எம் மக்கள் மத்தியில் அரசியல் ரீதியிலான கருத்தியல் ரீதியிலான பிளவுகளை உருவாக்கியுள்ளனர்.
தற்போது வடகிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் அதற்காக தூபமிடுகின்றனர். இச் செயலுக்கு ஆயர்களின் இறந்தவர்களை நினைவு கூருவோம் எனும் அறிவித்தல் துணையாக அமைந்து விடும் வாய்ப்பு உள்ளது.
வடகிழக்கு ஆயர்கள் வெளி சக்திகளின் அரசியல் தேவைகளுக்கு இடமளிக்காது, ஊடக அறிக்கை அதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வேதனை, அரசியல் ரீதியான உளவியல் தாக்கம், மாவீரர்களுடைய குடும்பத்தினரின் கவலை என்பவற்றை கருத்திற் கொண்டு மக்களின் குரலுக்கு செவிமடுத்து மக்களோடு பயணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இந்நிலையில் வட கிழக்கு சிவில் சமூகமும் , சமூக அமைப்புகளும், அரசியல் செயற்பாட்டாளர்களும் தனித்தனியாகவும் கூட்டாகவும் அவசரமாக செயற்பட்டு கத்தோலிக்க மக்களை தனியாக அழைப்பு விடுத்திருப்பதையும், ஆயர்களால் மாவீரர் வாரத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வையும் தடுத்து நிறுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதுவே எமது அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கு பலமாக அமையும்.எமது எதிரிகளுக்கும் பாடமாக அமையும் என்றார்.