கடும் பனிப்பொழிவு காரணமாக லண்டன் நகரின் ஹீத்ரோ விமான நிலையத்தில் 12-க்கும் அதிகமான விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக லண்டன் நகர் முழுவதும் கடுமையான பனிப் பொழிவு நிலவி வருகிறது. பனிப் பொழிவுடன் பலத்த காற்றும் வீசுகிறது.
இந்நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக லண்டன் நகரின் ஹீத்ரோ விமான நிலையத்தில் 12-க்கும் அதிகமான விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சில சேவைகள் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜெனீவா, மான்செஸ்டர், பிளாங்பர்ட் ஆகிய நரங்களுக்கு செல்லும் முக்கிய விமானங்களில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் மிகவும் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் ஒன்று ஹீத்ரோ விமான நிலையம். ஹீத்ரோ விமான நிலையத்தில் நேற்று திட்டமிடப்பட்ட 1,350 விமானங்களின் சேவைகளில் 80 சேவைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இது தொடர்பாக ஹீத்ரோ விமான நிலையம் தனது டுவிட்டர் பக்கத்தில், “மோசமான வானிலை காரணமாக விமான சேவைகளின் திட்டமிடலில் மாற்றங்கள் செய்யப்படலாம். பயணிகள் தங்களது பயண விவரங்களை முன் கூட்டியே அறிந்து கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சனிக்கிழமை வரை இந்த பனிப் பொழிவு இருக்கும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹீத்ரோ விமான நிலையம் மட்டுமன்றி ஐரோப்பாவின் ஏனைய விமான நிலையங்களும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளன.