தனியார் பள்ளிகளிலும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

211 0

மாணவியை இழந்த பெற்றோர் தங்கள் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் என்றும், தங்கள் மற்ற குழந்தையை படிக்க வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் 17 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள இறந்த மாணவியின் வீட்டிற்கு அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செந்தில் பாலாஜி ஆகியோர் சென்றனர். அவர்கள் மாணவியின் பெற்றோரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

அதனை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நடக்கக் கூடாத காரியம் சில நாட்களுக்கு முன்பு நடந்துவிட்டது. இன்றைக்கு நடந்துள்ள இந்த இழப்பானது எங்கோ தமிழகத்தின்ஒரு மூலையில் நடந்தது என்று நான் பார்க்கவில்லை. மாறாக என்னுடைய சொந்த பெண் இந்த நிலைமைக்கு ஆளாகி இருந்தால் எப்படிப்பட்ட நிலையில் இருப்பேனோ அந்த மனநிலையில் தான் நான் தற்போது இங்கு வந்துள்ளேன்.

இது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளேன். சம்பவம் நடந்த 24 மணி நேரத்திலேயே ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது பள்ளி முதல்வரையும் கைது செய்துள்ளோம்.

கைதான பள்ளி முதல்வர்

போக்சோ சட்டம் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு தேவை. அரசு பள்ளியை போல் தனியார் பள்ளிகளிலும் அந்தந்த ஆசிரியர்கள் மூலம் ஒரு மணி நேரம் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பாலியல் தொல்லைக்கு ஆளாகும் மாணவர்கள் அரசின் உதவி எண்ணிற்கு அழைத்து தகவலை தெரிவிக்கலாம்.

தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை வாங்கித் தருவது எங்களுடைய கடமை. அதனை நாங்கள் செய்வோம்.

மாணவியை இழந்த பெற்றோர் தங்கள் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் என்றும், தங்கள் மற்ற குழந்தையை படிக்க வைக்க வேண்டும். மேலும் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதனை முதல்- அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவி எழுதியதாக கூறப்படும் அந்தக் கடிதம் எந்த ஒரு குறிப்பும் இல்லாமல் உள்ளது. அது மாணவியின் கையெழுத்து தானா? என்பதை அறிய அவரது பெற்றோரிடம் விசாரிக்கப்படுகிறது. அவர்கள் தங்கள் மகள் கையெழுத்து என்று கூறினால் அதன்பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.