ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசின், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ”சத்திரசிகிச்சை வெற்றி-நோயாளர் மரணம்”என்பதை போன்றது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் சபையில் தெரிவித்தார்.
வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
வரவு- செலவு திட்டத்தினூடாக சொல்லப்படுகின்ற திட்டங்கள்,அறிவிக்கப்பட்டுள்ள செலவினங்கள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆனால் இவற்றை எந்த வருமானத்தில் இறுதியில் கையாளப்போகின்றீர்கள்? இந்த அரசு அதிகமான கடன்களையும் கடனுக்கான வட்டியையும் செலுத்த வேண்டியுள்ளது.
ஆகவே இந்த கடனும் வட்டியும் செலுத்த வேண்டிய அரசினால் 2022ஆம் ஆண்டிலே எவ்வாறு அபிவிருத்தி பணிகளை செம்மையாக மேற்கொள்ள முடியும்?
குறிப்பாக 80 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையின் தலா வருமானம்,தனி நபர் வருமானமெல்லாம் சிங்கப்பூர்,ஜப்பான் நாடுகளைவிடவும் உயர்ந்த நிலையிலேயே இருந்தது. ஆனால் இன்று இலங்கையில் தனிநபர் வருமானங்கள் எவ்வளவு தூரத்துக்கு கீழ் நிலைக்கு வந்துள்ளன என்பதை அவதானிக்க முடியும்.
சிங்கப்பூர்,ஜப்பான் நாடுகளில் இவை மேல் நிலைக்கு வந்துள்ளன என்றால் அந்த நாடுகளில் வாழ்கின்ற மக்களுக்கிடையில் இருந்த ஒற்றுமை உணர்வுகளும் அங்கு கட்டி வளர்க்கப்பட்ட இன சௌஜன்யமுமே காரணம்.
ஆனால் இலங்கையில் 70 ஆண்டுகளுக்கு மேல் யுத்தமும் இனவாதமும் கைகூடியிருந்த காரணத்தால் இங்கு சரியான பொருளாதாரத்தை கட்டியெழுப்பி இன ஒற்றுமையோடு இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தலைவர்கள் உருவாக்கப்படாமை இந்த நாட்டின் மிகப்பெரும் துர்ப்பாக்கியநிலை.
இனியும் இந்த சந்தர்ப்பத்தை இந்த நாடு இழக்கப் போகின்றதா? அல்லது சரி செய்யப்போகின்றதா என்பதனை காலம் தான் தீர்மானிக்க வேண்டும். இப்போதுகூட ஒரு காலம் கனிந்திருக்கின்றது.
தமிழ் தேசிய இனத்தை சிங்கள தேசிய இனத்துடன் இணைத்து தமிழ் மக்களுக்கான உரித்துக்களை வழங்கி பொருளாதாரத்தை கட்டி வளர்க்க முடியும் என்பதனை நீங்கள் மறந்து விடக்கூடாது.
ஆனால் அவ்வாறில்லாமல் இங்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ ; அரசின் நிதி அமைச்சர் பஷில் ராஜபக் ஷவின் ; 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ”சத்திரசிகிச்சை வெற்றி-நோயாளர்மரணம்”என்பதாகவே உள்ளது என்றார்.