போராட்டங்களால் கொரோனா பரவல் தீவிரமடையலாம் – வைத்தியநிபுணர் வாசன் ரட்ணசிங்கம்

186 0

நாட்டில் அமுலில் இருந்த பயணக்கட்டுப்பாடு மற்றும் சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்கள் தளர்த்தப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் மக்கள் பெருமளவில் ஒன்றுகூடுவதற்கு வாய்ப்பேற்படுத்தும் போராட்டங்களால் தொற்றுப்பரவல் அச்சுறுத்தல் மேலும் அதிகரிக்கும்.

ஆகவே போராட்டங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும்போது உரிய சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்கள் முழுமையாகப் பின்பற்றப்படுவது மிகவும் அவசியமாகும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியநிபுணர் வாசன் ரட்ணசிங்கம் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்தார்.

மேலும் அண்மைக்காலத்தில் டெங்குப்பரவலும் தீவிரமடைந்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், கொவிட் – 19 வைரஸ் தொற்று மற்றும் டெங்குநோய் ஆகிய இரண்டினதும் அறிகுறிகள் பெருமளவிற்கு ஒத்தவையாக இருப்பதனால் மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நாடளாவிய ரீதியில் நாளாந்தம் அடையாளங் காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்களவிலான வீழ்ச்சி அவதானிக்கப்படாத நிலையில், பொதுஇடங்களில் இடம்பெறும் ஒன்றுகூடல்களின்போது பின்பற்றப்படவேண்டிய சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலொன்று சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளை மறுபுறம் அரசாங்கத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு துறையினரால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள், மக்கள் போராட்டங்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது.

எனவே கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுப்பதனால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.