காவல்துறையினர் இலஞ்சம் பெறுகின்றார்கள் என அனேகர் கூறுகின்ற போதிலும் அது தொடர்பிலான முறைப்பாடுகள் யாழில் கிடை க்கப்பெறுவதில்லை என யாழ் மாவட்ட காவல்துறை அத்தியட்சகர் கணேசராஜா தெரிவித்தார்.
யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டம் நேற்று முன்தினம் யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது வட மாகாண சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் கணேசநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,யாழில் கடமையிலுள்ள காவல்துறை உத்தியோகத்தர்கள் இலஞ்சம் பெறுவதாக மக்கள் கூறி வருகின்ற போதிலும் இவை தொடர்பில் ஒரு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. மக்களின் ஒத்துழைப்பின்றி பொலிஸாரால் செயற்பட முடியாது. இளவாலையில் சமீபத்தில் இடம்பெற்ற குற்றச்சம்பவத்தின் போது பொதுமகன் ஒருவர் தனது தொலைபேசியில் எடுத்த வீடியோவாலேயே குற்றவாளிகள் பிடிபட்டனர். இதேபோல் நான் கொழும்பில் சேவையில் ஈடுபட்டிருந்த சமயம் 119 இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பு வந்தது. இதில் போக்குவரத்து துறை காவல்துறையினர் இலஞ்சம் பெறுவதாக தெரிவித்தனர்.
நாம் உடனடியாக குறித்த காவல்துறையினரை அழைத்து சோதனையிட்டோம். இதில் அவர்கள் தமது சப்பாத்தின் சொக்சினுள் இலஞ்சப்பணங்களை ஒழித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவர் 11 ஆயிரம் ரூபாயும், மற்றவர் 9 ஆயிரம் ரூபாயும் வைத்திருந்தனர்.
அவர்களில் ஒருவருடைய கைப்பைக்குள் இருந்து ஆண் உறையும் மீட்கப்பட்டது. பின்னர் இரு காவல்துறையினரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
காவல்துறை உத்தியோகத்தர் கடமைக்காக காவல் நிலையத்திலிருந்து வெளியேறும் போது எவ்வளவு பணம் கொண்டு செல்கின்றனர் என பதிவேட்டில் பதிவு செய்யப்படும். எனவே அவர்கள் இலஞ்சம் பெற்றால் பரிசோதனை செய்வதன் மூலம் கண்டு பிடித்துவிட முடியும். எனவே காவல்துறையினரின் மீறல்கள் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்தால் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.