‘உலக வரலாற்றில் யாரும் சாதிக்காத ஒன்றை நான் சாதித்திருக்கிறேன். உலக அளவில் அதிக ஆண்டுகள் சிறைவாசியாக இருந்த பெண்மணி என்றாகி இருக்கிறேன். இதை முறியடிக்கும் வாய்ப்பு இனியொரு பெண்ணுக்கு வரக்கூடாது. இந்தக் கொடிய வாய்ப்பு என்னுடனேயே முடியட்டும்’…
நூலின் ஒவ்வொரு பக்கமும் நம்மை உருக்குகிறது என்றாலும் கடைசிப் பக்கத்தில் இடம்பெற்றிருக்கிற நளினியின் இந்த வேண்டுகோள் இதயத்தை உலுக்கிவிடுகிறது.
நூலைப் படித்து முடித்தபிறகு என் மீதே எனக்குக் கோபம் வந்தது. உலகிலேயே நீண்ட காலம் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த பெண்மணியான ஆங் சான் சூச்சி குறித்து கவலைப்பட்ட அளவுக்குக் கூட உலகிலேயே நீண்டகாலம் கொடுஞ்சிறையில் வைக்கப்பட்டிருக்கும் நமது சொந்தச் சகோதரியைக் குறித்துக் கவலைப்படவில்லையே என்கிற தன்னிரக்கத்தில் குறுகிப் போனேன்.
நளினி என்கிற சகோதரிக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி ஒட்டுமொத்தத் தமிழ்ப் பெண்களின் மீதான அநீதி. அவர் செய்த ஒரே குற்றம் ஈழத் தமிழர் ஒருவரைக் காதலித்து மணந்ததும் அரசாங்க ரவுடிகளால் அந்த மனிதர் நசுக்கப்பட்டபோது அவரைக் கைவிட்டுவிட மறுத்ததும் தான்!
கணவர் நிரபராதி என்பது நிச்சயமாகத் தெரிகிறது நளினிக்கு! மனசாட்சிக்கு விரோதமாக நடக்கவும் சி.பி.ஐ.யின் விருப்பப்படியெல்லாம் பொய்வாக்குமூலம் கொடுக்கவும் மறுக்கிறார். தாய்மை அடைந்திருக்கும் எந்தப் பெண்ணாலும் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு காட்டுமிராண்டித்தனமான விசாரணைக் கொடுமையைக் கணவரின் பொருட்டு தாங்குகிறார். அப்ரூவர் ஆவதன்மூலம் ஒரு சொகுசான சுதந்திரமான வாழ்க்கையை அனுபவிக்க முடிகிற வாய்ப்புகள் கைக்கெட்டும் தூரத்திலேயே இருந்தும் கணவரின் பொருட்டு அவற்றை நிராகரிக்கிறார்.
‘முருகன்’ என்று சி.பி.ஐ. சூட்டியிருக்கிற ஒரு பித்தலாட்டப் பெயராலேயே அறியப்படுகிற கணவர் ஸ்ரீகரனுடன் விரல் விட்டு எண்ணக் கூடிய நாட்களே பழகியிருக்கிறார் நளினி. பழகியது எத்தனை நாளென்றெல்லாம் பார்க்காமல் கணவனுக்கு நீதி கேட்கும் வேள்வியில் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கிற நளினிக்கு இணையாக உலக வரலாற்றில் இன்னொரு பெண் இருக்க முடியுமா தெரியவில்லை.
கொல்லப்பட்ட கோவலன் நிரபராதி என்பதை அறிந்த கண்ணகி ‘தீர்ப்பளித்தவன் மன்னனாயிற்றே’ என்றெல்லாம் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கவில்லை. அரசவைக்குள் புயல்மாதிரி நுழைந்து ‘தேரா மன்னா’ என்று துணிவுடன் விளிக்கிறாள். ‘நல் திறம் படரா கொற்கை வேந்தே’ என்று நேரடியாகக் குற்றஞ்சாட்டுகிறாள். அஞ்சாமல் பேசுகிற இந்த நேர்மையான துணிவில் கண்ணகிக்கும் நளினிக்கும் இருக்கிற ஒற்றுமை வியக்க வைக்கிறது.
இரண்டே வித்தியாசங்கள்தான் கண்ணகிக்கும் நளினிக்கும்! கணவன் கொல்லப்பட்ட பிறகு நீதி கேட்டவள் கண்ணகி. கணவன் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லப்படுவதைத் தாங்கிக்கொள்ள இயலாமல் நீதி கேட்கிறார் நளினி. கண்ணகி நீதி கேட்டது அரசனிடம்! நளினி நீதி கேட்டது நீதியரசர்களிடம்!
அடித்து உதைத்து மிதித்து நசுக்கப்படும் நிலையிலும் அதையெல்லாம் சுட்டிக்காட்டினால் மேலதிகக் கொடுமைகளுக்கு ஆளாக நேரலாம் என்பதை அறிந்திருக்கும் நிலையிலும் நீதிமன்றத்தை நம்பி நியாயம் கேட்கிறார் நளினி. ஆனால் நீதியரசர்களில் எவரும் நெடுஞ்செழியன்களாக இருக்கவில்லை. அவர்கள் அரியணையிலிருந்து சரிந்து விழுந்துவிடவில்லை. நீதிதான் சரிந்து விழுகிறது ஒவ்வொரு முறையும்! விசாரணைக் கொடுமையைக் காட்டிலும் கொடுமையானது இந்த நீதிக் கொடுமை.
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் – என்று சொல்கிற சிலம்பு பல்லாயிரம் ஆண்டுகள் மூத்தது. அதில் குறிப்பிடப்படுகிற விழுமியங்கள் கலியுகத்தில் காலாவதியாகிவிட்டன. இந்த யதார்த்தத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் நளினி என்கிற மனுஷி ஏந்தியிருக்கும் தனி மனிதத் தமிழர் பண்புகள் நமது வியப்பைப் பலமடங்காக்கிவிடுகின்றன.
நளினியின் தரப்பை மட்டுமே நம்பி இப்படிப் பேசுகிறீர்களா – என்று யாராவது கேட்டால் அவர்களுக்கு இப்போதே பதில் சொல்லிவிட வேண்டும்.
‘சி.பி.ஐ. தரப்பை மட்டுமே நம்பி அவர்கள் இட்டுக்கட்டிச் சுமத்திய குற்றச்சாட்டுகளை மட்டுமே நம்பி பத்திரிகையாளர்களைக் கூட அனுமதிக்க மறுத்த ஒரு நீதிமன்றத்தின் ரகசிய விசாரணையையும் தீர்ப்பையும் நம்பி – நளினியைக் குற்றவாளியாகப் பார்த்தீர்களே அது மட்டும் நியாயமா’ – என்றெல்லாம் நான் திருப்பிக் கேட்கப் போவதில்லை. அவர்களுக்குச் சொல்ல வேறு பதில் இருக்கிறது.
கானல் நீரைப் போல கூப்பிடு தூரத்தில் விடுதலை தென்படுவதும் கிட்டப் போகிற சமயங்களிலெல்லாம் அது எட்டிப் போவதும் நளினி விஷயத்தில் வாடிக்கையாகி விட்டிருக்கிறது பல ஆண்டுகளாக! என்ன காரணமென்றே தெரிவிக்காமல் ஒவ்வொரு முறையும் நீதி மறுக்கப்பட்டு வருகிறது அவருக்கு!
இப்படியொரு நிலையில் விடுதலைக் கனவுக்கு ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைத்து விடுமோ என்றெல்லாம் அஞ்சாமல் தனக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையாகப் பேசத் துணிவது தெள்ளத் தெளிவான – சமரசமற்ற நிலைப்பாடு.
விடுதலையாகி வெளியே வரும்வரை சமர்த்தாகப் பதுங்கியிருப்பதும் வெளியே வந்த பிறகு பாய்வதும்தான் இன்றைய சமூகச் சூழலில் சாமர்த்தியமாகக் கருதப்படுகிறது. அதற்கு நேர்மாறாக ஆபத்தான ஒரு கட்டத்திலிருந்து மீண்டு வருவதற்கு முன்பே இப்படியொரு புத்தகத்தை நளினி எழுதியிருப்பது அவரது துணிவை மட்டுமே காட்டவில்லை. நேர்மையையும் காட்டுகிறது. இந்த நேர்மையை நான் மதிக்கிறேன்.
விடுதலையானபிறகு வெளி உலகின் பாதுகாப்போடு இதையெல்லாம் பேசுவது கோழைத்தனம் – என்று கூட நளினி நினைத்திருக்கக் கூடும். அது நளினியின் இயல்பான போர்க்குணம். ஒரு காட்டுவிலங்கைப் போல மாதக்கணக்கில் சங்கிலியால் கட்டப்பட்டு கைகாலெல்லாம் புண்ணாகிக் கேட்பாரற்றுக் கிடந்த நிலையிலும் அச்சமின்றி முடிவுகளை எடுத்தவர் அவர்.
நேர்படப் பேசுதல் முக்கியம்தான். எனினும் பாதுகாப்பான இடத்தில் இருந்துகொண்டு நேர்படப் பேசுவதும் பாதுகாப்பற்ற இடத்தில் இருந்துகொண்டு அப்படிப் பேசுவதும் முரண்பட்டவை. முன்னதில் மிகைப்படுத்திக் கூறிவிடக்கூடிய அபாயம் அதிகம். பின்னது அப்படியில்லை. இதில்தான் நம்பகத்தன்மை கூடுதல்.
‘சிறைக்கம்பிகளுக்குப் பின்னிருக்கும் அபாயங்களை அறிந்தே வெளி உலகுக்கு உண்மைகளை எடுத்துச் சொல்கிறேன்’ என்று பிரகடனம் செய்வதாக இருக்கிறது நளினியின் நூல். இது காக்கிச் சீருடைக்குள் ஒளிந்துகொண்டு சட்டங்களையும் தர்மங்களையும் காலில் போட்டு மிதிக்கும் கயவர்களுக்கு அவர்களது கோட்டைக்கு உள்ளிருந்தே ஒரு தமிழ்ப் பெண் தன்னந்தனியாக விடுத்திருக்கும் சவால். இந்த நெஞ்சுரத்தை மதிக்கிறேன்.
இந்தக் காரணங்களால்தான் நளினியின் தரப்பை நம்புகிறேன் நான். அவரது குற்றச்சாட்டுகளில் வார்த்தைக்கு வார்த்தை உறைந்திருக்கும் சத்திய ஆவேசத்தை என்னால் உணரமுடிகிறது. தனக்கு இழைக்கப்பட்ட அநீதியின் வலியை உடலின் ஒவ்வோரணுவிலும் 25 ஆண்டுகளுக்குப் பிறகும் உணர முடிகிற அளவுக்குக் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு சகோதரியை நம்பாமல் வேறெவரை நான் நம்ப முடியும்?
2009 இனப்படுகொலைக்குப் பின் ஈழம் குறித்தும் புலிகள் குறித்தும் எழுதாமலிருக்க முடியவில்லை என்னால்! ஈழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் பொய்ப்பிரச்சாரங்களை முறியடிக்க தொடர்ந்து எழுத வேண்டியிருக்கிறது.
இப்போது எழுதுவதைப் போல 1991க்கு முன்பு எழுதியிருந்தால் ராஜீவ்காந்தி கொலையில் 27வது குற்றவாளியாக என்னையும் சேர்த்திருக்கக் கூடும். அடிதாங்காமல் வலி தாங்காமல் தியாகராஜனோ மஹாராஜனோ எவனோ ஒரு ராஜன் தன்னிஷ்டப்படி எழுதிய ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தில் நானும் கையொப்பமிட்டிருப்பேன். இப்போது சொல்லுங்கள் நளினியை நம்பாமல் வேறெவரை நான் நம்ப முடியும்? அவருக்காகப் பேசாமல் வேறெவருக்காகப் பேசுவது?
நளினியிடம் சி.பி.ஐ. விசாரணை தொடங்கியபோது அவரது எடை 55 கிலோ. 60 நாள் விசாரணைக்குப் பிறகு அவரது எடை 35 கிலோ. அப்போது அவர் 4 மாத கர்ப்பிணி. அவரை விசாரித்தவர்கள் மனிதர்களா வேறெதாவதா? கொடுத்திருக்கிற புள்ளிவிவரத்தை வைத்து நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
ஒரு கட்டத்தில் சட்ட விரோத சிசுக்கொலை முயற்சியில் வேறு இறங்குகிறது சி.பி.ஐ. நான்கு மாதக் கருவைக் கலைக்க தனியார் மருத்துவமனைக்கு நளினியை அழைத்துச் செல்கிறது. அன்று அரித்ராவையும் நளினியையும் காப்பாற்றியவர் ‘அபார்ஷன் செய்யமுடியாது’ என்று உறுதியுடன் மறுத்த பெண் மருத்துவர். இத்தனைக்கும் அறுபது நாளில் இருபது கிலோ எடையைக் குறைத்த ‘எடைக் குறைப்பு நிபுணர்கள்’ அந்த 35 கிலோ பெண்ணுக்கு ‘அபார்ஷன்’ செய்தே ஆக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றிருக்கிறார்கள்.
ஈவிரக்கமற்ற அந்த எமதூதர்கள் கொடுத்த நெருக்கடியைப் பார்த்து எரிச்சலடைந்த பெண் மருத்துவர் அவர்களைக் கடுமையாக எச்சரித்திருக்கிறார். ஒருகட்டத்தில் ‘உங்கள் டிப்பார்ட்மென்டிலேயே ஒரு மருத்துவமனையை உருவாக்கிக் கொள்ளுங்களேன் அங்கிருப்பவர்கள் உங்கள் உத்தரவை ஏற்றுச் செயல்பட வாய்ப்பிருக்கும்’ என்று முகத்திலடித்ததைப்போல சொல்லியிருக்கிறார். அந்த வார்த்தைகள் சி.பி.ஐ.யின் கோரமுகத்தைச் சுற்றிவளைக்காமல் அம்பலப்படுத்துபவை.
ராஜீவ் கொலைவழக்கில் சி.பி.ஐ.க்குப் பயந்து விசாரணை அதிகாரிகளின் தாளத்துக்கேற்ப ஆடியவர்களும் பாடியவர்களும்தான் அதிகம். அந்த நீண்ட பட்டியலில் இந்தப் பெண் மருத்துவரைப் போன்ற ஒரு சிலரே விதிவிலக்காக இருந்திருக்கின்றனர். அந்த வழக்கு என்றில்லை அதிகப் பரபரப்பை ஏற்படுத்துகிற எந்த வழக்கிலும் இதைப் போன்ற நேர்மையாளர்கள் சிலரால்தான் ஓரிரு சந்தர்ப்பத்திலாவது தப்பிப் பிழைக்கிறது நீதி.
கருவைக் கலைக்க மறுத்து தனது சிசுவைக் காப்பாற்றிய அந்தப் பெண்மருத்துவரைத் தெய்வமென்றே குறிப்பிடும் நளினி அந்த மருத்துவர் கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தால் அதிகாரிகள் தன்மீது பாய்ந்ததையும் பதிவு செய்கிறார்.
‘அதன்பிறகு விழுந்த அடி உதை எல்லாம் சொல்லி வைத்தமாதிரி வயிற்றுப் பகுதியில்தான் விழுந்தது. சங்கர் என்ற ஆய்வாளரும் அவரது சகாக்களும்தான் அதிகம் உதைத்தவர்கள். உதை எங்கு வேண்டுமானாலும் விழட்டும் வயிற்றில் விழுந்துவிடக் கூடாது என்று அப்படியே முட்டியையும் கையையும் சேர்த்தமாதிரி சுருண்டு படுத்துக் கொள்வேன்’ என்று நளினி விவரிக்கும் போது படிக்கிற நம்மாலேயே அந்த வலியை உணர முடிகிறது.
நளினி மட்டுமா சித்திரவதை செய்யப்பட்டார்? நளினியை எப்படியாவது வழிக்குக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக அவரது குடும்பமே சித்திரவதை செய்யப்படுகிறது. நளினியின் தாயார் தங்கை தம்பி தாய்மாமா தோழி என்று ஒருவரையும் விட்டுவைக்கவில்லை சி.பி.ஐ.
மாமா ராசரத்தினம் மனநிலை குன்றியவர். அவரைக் கசக்கிப் பிழிந்தபிறகுதான் இதை உணர்கிறார்கள் சிபிஐ மேதாவிகள். மனநிலை குன்றிய அவரை எங்கேயோ கொண்டுபோய் அனாதரவாக விட்டுவிடுகிறார்கள். எந்த உறவையும் அறிய இயலாத அந்த மனிதர் அனாதையாகவே இறந்துவிடுகிறார். ‘நாங்கள் சொல்வதைக் கேட்காவிட்டால் இப்படித்தான் தெருவோரத்தில் அனாதைப் பிணமாக கிடப்பீர்கள்’ என்பது சிபிஐ நம் ஒவ்வொருவருக்கும் போதிக்கிற காட்டுத்தனமான பாடம்.
தங்கை கல்யாணியை 40 நாள் விசாரணைக்குப் பிறகு வெளியே விரட்டி விடுகிறது சிபிஐ. அப்போது அவருக்கு 21 வயது. அவரையும் சட்டத்துக்கு உட்பட்ட நேர்மையான வழிகளில் விசாரித்திருக்க வாய்ப்பேயில்லை.
ஊடகங்கள் வாயிலாக சிபிஐ கிளப்பிவிட்ட கட்டுக்கதைகளால் உறவினர்களின் ஆதரவைப் பெற முடியாத நிலை. அப்படியொரு நிலையில் கல்யாணி என்கிற அந்தச் சகோதரி பட்ட கஷ்டங்களை நளினி விவரிக்கும்போது நமக்கே அவமானமாக இருக்கிறது. ‘இவர்கள்மீது எப்படியாவது கொலைக்குற்றத்தைச் சுமத்திவிட வேண்டும்’ என்கிற வெறியில் ஒரு குடும்பத்தையே கொத்திக் குதறி எறிந்திருக்கிறது சிபிஐ.
காவல்துறையில் இருக்கிற கருப்பாடுகளின் இழிகுணம் ஒருபுறமும் ‘எவன் குடும்பம் நாசமாய்ப் போனால் நமக்கென்ன பதக்கமோ பதவி உயர்வோ தான் முக்கியம்’ என்கிற அதிகார வெறி இன்னொரு புறமும் இருக்க அதில் சிக்கிச் சின்னாபின்னமாகிவிட்டிருக்கிறது நளினியின் குடும்பம்.
நளினியின் தாயார் பத்மாவதி பிரசவம் பார்ப்பதில் கைதேர்ந்த செவிலியர். அவரது அர்ப்பணிப்பால் அவர் பணியாற்றிய மருத்துவமனையில் தனி மரியாதை இருந்தது. அந்தப் பெண்மணி குறித்து சிபிஐயின் சிறப்புப் புலனாய்வுக் குழு பரப்பிய கட்டுக்கதைகள் அருவருப்பானவை.
தேசியத் தலைவர் ஒருவரின் கொலை குறித்து புலனாய்வு செய்ய அமைக்கப்பட்ட ஒரு குழு அந்த வேலையை விட்டுவிட்டு இப்படியெல்லாம் கதை திரைக்கதை வசனம் எழுதிக் கொண்டிருந்ததற்கு என்ன காரணம்? அதன் பின்னணி யார்?
தன் மீதான நம்பகத்தன்மையை மீட்டெடுப்பதற்காகவாவது இதுகுறித்த உள்ளக விசாரணை ஒன்றை சிபிஐ நடத்துவது நல்லது. அந்த உள்ளக விசாரணையின் மூலம் ராஜீவ் கொலையில் உண்மையான குற்றவாளிகள் யாரென்பது கூட தெரியவருவதற்கான வாய்ப்பு உருவாகிவிடக் கூடும்.
இந்த உள்ளக விசாரணை கடினமானதும் அல்ல! நளினி குடும்பத்தைக் குறித்த அவதூறான செய்திகளைப் பரப்பியவர்களைக் காட்டிக்கொடுக்க சிபிஐயில் இருப்பவர்களோ இருந்தவர்களோ மறுத்தாலும் பிரச்சினையில்லை. அதையெல்லாம் விலாவாரியாக எழுதிப் பரபரப்பாக்கிய பத்திரிகைகளையும் பத்திரிகையாளர்களையும் விசாரித்தாலே போதும். சூத்திரதாரி யார் என்பது அம்பலமாகிவிடும். அது பல மர்ம முடிச்சுகளை அவிழ்க்கக் கூடும்.
உடல்ரீதியான சித்திரவதைகளோடு நிறுத்திவிடாமல் நளினியின் குடும்பத்தை உளவியல் ரீதியான கடும் சித்திரவதைக்கு ஆளாக்கிய கட்டுக்கதைகளின் மூலக் கதாசிரியர் யார் என்பதை அம்பலப்படுத்தியே ஆகவேண்டும் – என்கிற ஒரே நோக்கத்துடன்தான் இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறேன்.
நளினியின் நோக்கமும் இதுதான்! வெளி உலகில் இருப்பவர்களின் அனுதாபத்தை இந்த நூலின் வாயிலாகப் பெறவேண்டும் – என்று அவர் நினைக்கவில்லை. உண்மைகளை அம்பலப்படுத்துவதுதான் அவரது நோக்கமாக இருக்கிறது! நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் அதை உணர முடிகிறது.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் தியாகராஜன் என்கிற ஒரு நேர்மையற்ற அதிகாரி தன்னிஷ்டப்படி எழுதிக்கொண்ட ஒரு வாக்குமூலம் நளினியின் வாக்குமூலமேயில்லை. அது ஒரு போலி வாக்குமூலம். நளினி தெரிவித்த அத்தனைத் தகவல்களையும் ஒன்று விடாமல் அழுத்தந்திருத்தமாக நண்பர் பா.ஏகலைவன் பதிவு செய்திருக்கிற இந்த நூல்தான் நளினியின் உண்மையான வாக்குமூலம்.
ராஜீவ்காந்தி போன்ற ஒரு பெரிய தலைவருடைய கொலை வழக்கில் வாக்குமூலம் வாங்க தியாகராஜன் என்கிற தகுதியற்ற அதிகாரி தானா கிடைத்தார் – என்று ஒரு இடத்தில் கேட்கிறார் நளினி. நளினியின் இந்த நேரடிக் கேள்விக்கு வேறு யார் பதில் சொல்லாவிட்டாலும் கார்த்திகேயன் என்கிற மனிதர் பதில் சொல்லியாகவேண்டும் மனசாட்சி என்கிற ஒன்று அவருக்கு இருந்தால்!
பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டவர் கேரளத்தைச் சேர்ந்த கன்னிகாஸ்திரியான – அபயா. அந்தக் கொலை வழக்கைத் தற்கொலை வழக்காக மாற்றும்படி விசாரணை அதிகாரிக்கு தியாகராஜன் அழுத்தம் கொடுத்ததும் அதனால் மனமுடைந்த நேர்மையான விசாரணை அதிகாரி பதவியைத் தூக்கியெறிந்துவிட்டு வெளியே வந்து உண்மையை அம்பலப்படுத்தியதும் கேரளம் அறிந்த கதை.
அந்த வழக்கில் சட்டத்துக்குப் புறம்பாக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக தியாகராஜனைக் கண்டித்திருக்கிறது கேரள உயர்நீதிமன்றம். இப்படியொரு மோசமான ரெகார்ட் வைத்திருப்பவரைத் தேடிப்பிடித்து கார்த்திகேயன் பயன்படுத்தியிருக்கிறாரே என்ன காரணம்? அவரைத்தவிர வேறெவரால் இதற்கு பதில் சொல்ல முடியும்?
‘யாரைக் காப்பதற்காக அபயா வழக்கைத் தியாகராஜன் திரிக்கப் பார்த்தார் யாருக்கு அபயம் கொடுக்கப் பார்த்தார்’ – என்கிற கேள்வி எவ்வளவு நியாயமோ அவ்வளவு நியாயம் – ‘யாரைக் காப்பதற்காக யாருக்கு அபயம் கொடுப்பதற்காக நளினியிடம் ஒரு போலி வாக்குமூலத்தில் வற்புறுத்திக் கையெழுத்து வாங்கினார்’ என்கிற கேள்வியும்! ‘மனசாட்சியோடு பேசுகிறேன்’ என்றெல்லாம் சீன் போட்டுக் கொண்டிருக்காமல் உள்ளதை உள்ளபடி பேச இனியேனும் முன்வரவேண்டும் தியாகராஜன்.
தியாகராஜன் என்றில்லை ஒட்டுமொத்த சிஸ்டமும் அப்படித்தான் இருந்திருக்கிறது இருக்கிறது. எதற்கெடுத்தாலும் ‘சி.பி.ஐ. விசாரணை தேவை’ என்று குரல்கொடுக்கும் தமிழகத் தலைவர்களும் அமைப்புகளும் நளினியின் நூலைப் படித்த பிறகாவது சி.பி.ஐ.யின் நிஜமான முகத்தையும் அதன் எஜமான விசுவாசத்தையும் புரிந்துகொண்டு எச்சரிக்கையுடன் பேசவேண்டும்.
சி.பி.ஐ. மட்டுமா ஒட்டுமொத்தக் காவல்துறையுமே கறுப்பாடுகளின் கைங்கரியத்தால் களங்கப்பட்டுக் கிடக்கிறது. சைதாப்பேட்டையில் கைதாகும் நளினியையும் ஸ்ரீகரனையும் ஆட்டோவில் அழைத்துச் செல்லும் போதே அவர்களை அழைத்துச் செல்கிற உதவி ஆய்வாளர் தனது பொறுக்கித்தனத்தை ஆரம்பித்துவிடுகிறான். அதைப் படிக்கிறபோது ‘எங்கள் நண்பன்’ என்று காவல்துறையை ஏற்க அப்பாவிப் பொதுமக்கள் மறுப்பது ஏன் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
ஒரு அப்பாவிப் பெண்ணின் இயலாமையைப் பயன்படுத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அந்த அதிகாரிக்கு பணமுடிப்பும் பாராட்டுப் பத்திரமும் பின்னர் தரப்பட்டதை நளினி கோபத்துடன் குறிப்பிடுகிறபோது அந்தக் கோபம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. கழுகுகளை நம்பி வாழ்கிற கோழிக்குஞ்சுகளாக இருக்க நேர்ந்திருக்கும் இழிவை எண்ணித் தலைகுனிய வேண்டியிருக்கிறது.
தமிழினத்தின் பெருமதிப்புக்குரிய சா.துரைசாமிதான் தடா நீதிமன்றத்தில் நளினியின் வழக்கறிஞர். அவரையும் சி.பி.ஐ. விட்டுவைக்கவில்லை. பலவழிகளில் நெருக்கடி கொடுத்திருக்கிறது.
இதயநோய் அறுவை சிகிச்சைக்குப் பிறகும் கடமை உணர்வுடன் நீதிமன்றத்துக்கு வந்த துரைசாமியை வாகனத்திலிருந்து இறக்கி நீண்ட தூரம் நடக்க விட்டுப் பழிவாங்கியிருக்கிறார்கள். அந்த மனிதர் மூச்சு வாங்க நடந்துவந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்ததைப் பார்த்து நீதிபதியே கலங்கியிருக்கிறார். ‘இங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது’ என்று கேட்டு மனசாட்சியுள்ள அந்த நீதிபதி கதறி அழுததை வேதனையுடன் பதிவு செய்கிறார் நளினி.
இவ்வளவு கொடுமை நடந்துகொண்டிருந்தபோது ராஜீவ் கொலை வழக்கில் என்ன நடக்கிறது என்பதை வெளியுலகுக்குத் தெரிவிக்க வேண்டிய ஊடகங்கள் பூடகமாகக் கூடப் பேச மறுத்து மௌனம் சாதித்தது அதைக் காட்டிலும் பெரிய கொடுமை. சி.பி.ஐ. சொல்வதுதான் வேத வாக்காக இருந்தது பெரும்பாலான கருத்துச் சுதந்திரக் காவல் தெய்வங்களுக்கு!
இந்த ஊடகத் துரோகம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் குற்றஞ்சாட்டப்பட்ட 26 பேருக்கும் மரணதண்டனை என்கிற அதிர்ச்சித் தீர்ப்பு வெளியான பிறகு – அவர்களுக்கு நீதி கிடைக்கப் போராடிய ஐயா நெடுமாறன் உள்ளிட்டோரையும் கருணை மனுவை நிராகரிக்கச் சொன்ன மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை 2 முறை நிராகரித்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாமையும் நளினி நினைவுகூர்கிறபோது நெகிழ்ந்துபோகிறது இதயம். இவர்களைப் போன்ற மனிதர்களுக்காகத்தான் தவணை முறையிலாவது மழை பெய்துகொண்டிருக்கிறது என்று நம்புகிறேன்.
இந்த வழக்கின் விசாரணை தீர்ப்பு இரண்டுமே கேலிக்கூத்து. ஒன்று சட்டத்தையும் இன்னொன்று – நீதி நியாயங்களையும் கேலிக்கூத்தாக்கியது. இரண்டும் சேர்ந்து நளினியின் தனிமனித உரிமையுடன் உண்மையையும் நசுக்கிவிட்டிருக்கின்றன. தனக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை புலம்பும் தொனியில் இல்லாமல் நீதி கேட்கும் தொனியில் நளினி எடுத்துச் சொல்வதும் நளினியின் அந்த உணர்வை ஏகலைவனின் எழுத்து அவரிடமிருந்து நமக்கு எளிதாகக் கடத்துவதும் இந்த நூலை மிக மிகக் குறிப்பிடத்தக்க ஒரு நூலாக ஆக்கியிருக்கிறது.
நளினியையும் ஸ்ரீகரனையும் எப்படியாவது பிரித்துவிடவேண்டும் என்பதுதான் சி.பி.ஐ.யின் திட்டம். இதுகுறித்து விரிவாகப் பேசுகிறது இந்த நூல். ‘சி.பி.ஐ. விதம்விதமான சித்திரவதைகளை செய்தபோதும் நாங்கள் பிரிந்து விடாமல் இருந்ததற்கு அந்த ஐந்து நாட்கள் நாங்கள் பட்ட வலியும் அனுபவமுமே காரணம்’ என்று கைதாவதற்கு முன்னான ஐந்து நாட்களைக் குறிப்பிடுகிறார் நளினி. அந்த 5 நாள் அனுபவங்களைப் பதிவு செய்துமிருக்கிறார். எதிர்ப்புகளுக்கிடையே திருமணம் செய்துகொள்ளும் காதலர்கள் ஒவ்வொருவரும் படித்துப் பார்க்க வேண்டிய பகுதி அது.
3 அல்லது 4 மாதமே பழகியிருக்கிறார்கள் நளினியும் ஸ்ரீகரனும். சேர்ந்து வாழ்ந்ததென்பது ஓரிரு நாள்தான். பேசிப் பழக சந்தர்ப்பம் கிடைத்தது வெறும் பத்து நாள்தான். அதற்குள் காதல் திருமணம். அது தங்களை 25 ஆண்டுக்கும் மேலாக கொடிய விசாரணை கொடுஞ்சிறை தூக்குத்தண்டனை – என்று விரட்டிக் கொண்டேயிருக்கும் என்பதை அவர்கள் அறியவேயில்லை. என்றாலும் அத்தனைக் கொடுமைகளையும் சந்தித்தபிறகும் பிரிய மறுத்து விடுகிறார்கள்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு அரிதினும் அரியதோ இல்லையோ நளினி – ஸ்ரீகரனின் இந்த மானுடக்காதல் அரிதினும் அரிதினும் அரிதினும் அரியது. ‘விசாரிப்பவர்கள் யாராக இருந்தாலும் நாங்கள் மனிதர்களாகத்தான் இருப்போம்’ என்பதை ஒவ்வொருமுறையும் நிரூபித்திருக்கிறார்கள் அவர்கள்.
சகோதரி நளினிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை எனக்கு!
ஸ்ரீகரன் என்கிற முருகனுக்குச் சொல்வதற்கு மட்டும் ஒரு செய்தி இருக்கிறது.
நீ சபிக்கப்பட்டவன் இல்லை முருகன்…. ஆசீர்வதிக்கப்பட்டவன்.
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!
உனக்குக் கிடைத்த மாதிரி ஒரு மனைவி உலகில் வேறெவருக்காவது கிடைப்பாள் என்று நினைக்கிறாயா?
சங்கு சுட்டாலும் வெண்மை தரும் – என்பதற்கு உன் இல்வாழ்க்கைத் துணையான எங்கள் நளினியன்றி வேறு யார் உதாரணமாக இருக்க முடியும் முருகன்!