தமிழ் அரசியல் தலைமை உண்மையைச் சொல்ல வேண்டும்!

248 0

15822980_1586507298032810_4928807902816962067_nநல்லாட்சியைக் காப்பாற்றுவதே நமது கடமை என்று தமிழ் அரசியல் தலைமை நினைக்குமாயின் அதன் விளைவு மிகுந்த ஏமாற்றமாகவே இருக்கும்.

நல்லாட்சியைக் காப்பாற்றுவதாக இருந்தால், தமிழ் மக்களின் விடயத்தில் பேரம் பேசுதல் இருக்க வேண்டும். எனினும் அத்தகையதொரு பேரம் பேசுதல் பற்றி தமிழ் அரசியல் தலைமை நினைப்பதாகத் தெரியவில்லை.

உண்மையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது அவருக்கான ஆதரவை தமிழ் மக்கள் வழங்குவதாயின்; மீள்குடியேற்றம், காணாமல்போனவர்கள் தொடர்பிலான விசாரணை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, சர்வதேச போர்க்குற்ற விசாரணை போன்ற விடயங்களில் இரு தரப்பு ஒப்பந்தம் செய்து கொண்டு ஆதரவை வழங்கியிருக்க வேண்டும்.

ஆனால் அதனை தமிழ் அரசியல் தலைமை செய்யாததன் காரணமாக இன்று நல்லாட்சியைக் கொண்டு நாம் எதுவும் செய்ய முடியவில்லை.

ஆனால் முஸ்லிம் அரசியல் தலைமையைப் பொறுத்தவரை அவர்கள் இராஜதந்திரமாக ஜனாதிபதித் தேர்தலின் போதே நிபந்தனை விதித்து ஆதரவு வழங்கினர். இதன் காரணமாக அவர்கள் சொல்வதை நல்லாட்சி செய்வது என்றாகிவிட்டது.

ஆக, ஜனாதிபதித் தேர்தலின் போது எங்களுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் ஓர் உடன்பாடு இல்லாததனால் இன்று எதையும் தட்டிக் கழிப்பதாக நிலைமை மாறியுள்ளது.

இன்றுவரை நல்லாட்சியில் நடக்க வேண்டியது நடக்கவில்லை.தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கொடுப்பதில் கூட நல்லாட்சியால் இன்னமும் முடியவில்லை. தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருந்தால் மட்டுமே அவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது, இல்லையேல்அதுபற்றி கவனிப்பதில்லை என்பதே நல்லாட்சியிலும் நடக்கிறது.

இப்போது கூட புதிய அரசியலமைப்புச் சீர்திருத்த வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. சமஷ்டி முறையில் அதிகாரப் பகிர்வு என்ற விடயம் ஓரங்கட்டப்பட்டு, ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்பதே மேலெழுந்துள்ளது.

இது பற்றியும் எங்கள் அரசியல் தலைமை கவனிப்பதாக இல்லை.அரசியலமைப்புச் சீர்திருத்தம் எங்களுக்கு எதைத் தரும் என்று கூடத் தெரியாத நிலையில் நல்லாட்சியைக் காப்பாற்றுவது எங்களின் கடமையும் கட்டாயமும் என்பது போல தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் கருதுகிறார்.

நல்லாட்சியைக் கவிழ்ப்பேன் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சூளுரைத்திருக்கும் நிலையில், நல்லாட்சியைக் காப்பாற்றுவது எங்களின் கடமை என்று சம்பந்தர் கூறுவது பொருத்துடையதாயினும்,இச்சந்தர்ப்பத்திலாவது நல்லாட்சிக்கு நிபந்தனை விதிப்பு என்ற கட்டமைப்புக்குள் வந்தாக வேண்டும்.

ஆட்சியைக் கவிழ்ப்பேன் என்று மகிந்த ராஜபக்சவின் சூளுரைப்பை சாதாரணமாகக் கருதிவிடக் கூடாது என்பது கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவின் கருத்து அந்தக் கருத்தை நாமும் அடியோடு புறந்தள்ள முடியாது.

எனவே ஜனாதிபதித் தேர்தலின் போது நாம் விட்ட தவறை சீர்ப்படுத்துவதற்கான மற்றொரு சந்தர்ப்பம் இப்போது ஏற்பட்டுள்ளது.

ஆட்சியைக் கவிழ்ப்பது என்ற மகிந்த ராஜபக்சவின் சூளுரைப்பில் இருந்து நல்லாட்சியைப் பாது காப்பதாயின் அதற்கு தமிழ்த் தரப்பின் ஆதரவு நல்லாட்சிக்கு நிச்சயம் தேவைப்படும்.

எனவே இச் சூழ்நிலையைப் பயன்படுத்த நாம் தயாராக வேண்டும். நல்லாட்சியைக் காப்பாற்றுவதற்கு எங்கள் ஆதரவு தேவையென்றால், சில விடயங்களில் நாம் உடன்பாடு காண வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூற வேண்டும்.

இதைவிடுத்து அவர்கள் எதுவும் தராவிட்டாலும் நாங்கள் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறுவது எதிர்க்கட்சித் தலைமையைப் பாதுகாக்க வேண்டும் என்பதாகப் பொருள்படும்.

ஆகையால் சொந்த விடயங்களை தூக்கி எறிந்து விட்டு தமிழ் மக்களின் நலன் தொடர்பில் கவனம் செலுத்தி அவற்றை நிறைவேற்றுவதற்கான வியூகங்களை அமைப்பதே இன்றைய காலத்தின் தேவையாகும்.