இலங்கை அரசாங்கம் நல்லிணக்க செயலணியின் பரிந்துரை அறிக்கையை தொடர்ந்தும் புறக்கணித்து வருகின்றது- எம்னெஸ்டி இன்டர் நேஷனல்

287 0

download (5)நல்லிணக்க செயலணியின் பரிந்துரை அறிக்கையை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் புறக்கணித்து வருகின்றமையானது, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயம் நிலைநாட்டப்படுகின்றமை எட்டாக்கனியாக இருக்கும் என எம்னெஸ்டி இன்டர் நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.

யுத்தத்தின் போது ஏற்பட்ட உயிரிழப்புக்கள், காணாமல் போனோரின் குடும்பங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுக்கு உரிய நியாயம், உண்மை மற்றும் இழப்பீடுகள் கிடைக்கின்றமை எட்டாக்கனியாக இருக்கும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச சட்டவிதிமுறைகளுக்கு அமைய ஸ்தாபிக்கப்பட்டுள்ள நல்லிணக்க செயலணியின் கண்டுபிடிப்புக்கள் அடங்கிய அறிக்கையை, இலங்கை அரசாங்கம் மிக எளிதாக அலட்சியப்படுத்தியமையானது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

பல முக்கிய பரிந்துரைகள் அடங்கிய சுமார் 700ற்கும் அதிகமான பக்கங்களை கொண்ட அறிக்கையொன்று இந்த மாதம் 3ஆம் திகதி நல்லிணக்க செயலணியினால் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை சமர்ப்பிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பங்கேற்றிருக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் தமக்கு நம்பிக்கை கிடையாது என சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக எம்னெஸ்டி இன்டர் நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெருமளவான மக்கள் தாமாகவே முன்வந்து, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கருத்துக்களை நல்லிணக்க செயலணியிடம் தெரிவித்துள்ளதாகவும் எம்னெஸ்டி இன்டர் நேஷனல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.