பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

203 0

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செயல்முறைப் பரீட்சை டிசெம்பர் 01ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில், டிசெம்பர் 11 ஆம் திகதி வரை செயல்முறைப் பரீட்சைகள் நடைபெறும் என்றும் திணைக்களம் தெரிவித்தது.

இதேவேளை, கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பக்காலம் எதிர்வரும் 20ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்தது.

நேற்றைய தினத்துடன், விண்ணப்பங்களுக்கான காலக்கெடு முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, பல்கலைக்கழக நுழைவு அனுமதி கிடைக்காத பெருமளவிலான மாணவர்கள், க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு விடுத்த கோரிக்கையின் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பரீட்சைக்குத் தோற்ற விருப்பமுள்ளவர்கள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic அல்லது உத்தியோகபூர்வ திறன்பேசி செயலியான”DoE” ஊடாக பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளனர்.

மேலும், அரச பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மேற்கண்ட பரீட்சைக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள், உரிய அறிவுறுத்தல்களின்படி விண்ணப்பப் படிவத்தை ஒன்லைனில் தனிப்பட்ட முறையில் பூர்த்தி செய்து, பின்னர் சமர்ப்பிப்பதற்கான நகலை தங்களிடம்  பாதுகாப்பாக வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.