சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 4 விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்

363 0

விண்வெளி நிலையத்தில் இருந்து 4 விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பியதை தொடர்ந்து, புதிதாக 4 விண்வெளி வீரர்களை விண்வெளி நிலையத்துக்கு அனுப்ப ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயராகி வருகிறது.அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து கூட்டு திட்டமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணியை 1998-ல் நிறைவு செய்தனர்.

தொடக்கத்தில் இந்த நிலையம், 15 ஆண்டுகளுக்கு இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகும் அந்த நிலையம் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பூமியிலிருந்து 410 கிலோ மீட்டர் உயரத்தில் இயங்கி வரும் இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்கா, ரஷியா மற்றும் பிற உறுப்பு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் அங்கு தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவை சேர்ந்த ஷேன் கிம்ப்ரோ மற்றும் மேகன் மெக்ஆர்தர், ஜப்பானின் அகிஹிகோ ஹோஷைட் மற்றும் பிரான்சை சேர்ந்த தாமஸ் பெஸ்கெட் ஆகிய 4 விண்வெளி வீரர்கள் கடந்த ஏப்ரல் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலத்தில் இவர்கள் 4 பேரும் விண்வெளி நிலையம் சென்றிருந்தனர். அங்கு இவர்கள் தங்களின் பணியை முடித்த பிறகு அதே ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது.

அதன்படி அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிரான்சை சேர்ந்த விண்வெளி வீரர்கள் 4 பேரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு புறப்பட இருந்த நிலையில் மோசமான வானிலையால் அவர்களின் பயணம் தள்ளிவைக்கப்படுவதாக நாசா அறிவித்தது.

இதற்கிடையில் விண்வெளி வீரர்கள் பயணிக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கழிவறை உடைந்ததால் வீரர்கள் 4 பேரும் ‘டயப்பர்’ அணிந்து கொண்டு இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவானது.

விண்வெளியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது போல இந்த சவாலையும் எதிர்கொள்வோம் என விண்வெளி வீரர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் 200 நாட்களை விண்வெளியில் கழித்த பிறகு வீண்வெளி வீரர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டனர்.

8 மணி நேர பயணத்துக்கு பிறகு நேற்று முன்தினம் நள்ளிரவில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பென்சகோலா கடற்கரையில் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் பத்திரமாக தரையிறங்கியது.

இதை தொடர்ந்து அங்கு தயார் நிலையில் இருந்த நாசா குழுவினர் விண்கலத்தில் இருந்து விண்வெளி வீரர்கள் 4 பேரையும் பத்திரமாக வெளியேற்றினர்.

அவர்கள் 4 பேரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே விண்வெளி நிலையத்தில் இருந்து 4 விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பியதை தொடர்ந்து, புதிதாக 4 விண்வெளி வீரர்களை விண்வெளி நிலையத்துக்கு அனுப்ப ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயராகி வருகிறது. வீரர்கள் 4 பேரும் இன்று (புதன்கிழமை) இரவு ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் விண்வெளி நிலையத்துக்கு புறப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.